12-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை - தமிழகத்தில் இன்றைய விலை என்ன?

பெட்ரோல் நிலையம்

சென்னையில் 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

 • Share this:
  பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மெல்ல மெல்ல அதிகரித்துவந்தது. அதன் உச்சமாக மார்ச் மாத தொடக்கத்தில் பெட்ரோலின் விலை தமிழகத்தில் 93 ரூபாயைக் கடந்தது. அதேபோல, டீசலின் விலை 86 ரூபாயைக் கடந்தது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்தது. அதன்பின்னர், பெட்ரோல், டீசல் சிறிது இறங்கியது.

  இந்தநிலையில், கடந்த 12 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துவருகிறது. தமிழகத்தில் பெட்ரோலின் விலை 92.58 ரூபாய்க்கும், டீசலின் விலை 85.88 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல, டெல்லியில் பெட்ரோலின் விலை 90.56 ரூபாய்க்கும், டீசலின் விலை 80.87 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோலின் விலை 96.98 ரூபாய்க்கும், டீசலின் விலை 87.96 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை 90.77 ரூபாய்க்கும், டீசலின் விலை 83.75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  பெட்ரோலைப் பொறுத்தவரை லிட்டருக்கு மத்திய அரசு 32.98 ரூபாய் வரியாக விதிக்கிறது. மாநில அரசுகள் 20 ரூபாய் வரை வரி விதிக்கிறது. பெட்ரோலைப் பொறுத்தவரை லிட்டருக்கு 50 ரூபாய்க்கும் கூடுதலாக வரி அடங்கும். டீசலைப் பொறுத்தவரை லிட்டருக்கு 40 ரூபாய்க்கும் கூடுதலாக வரி அடங்கும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: