Home /News /tamil-nadu /

மோடியின் உரையை கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை- வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மோடியின் உரையை கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை- வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் உரை கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான ரங்கராஜன் நரசிம்மன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி, மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்கு கோவிலில் அனுமதியளிக்க கூடாது எனவும், கோவில் வளாகங்களில் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கோவில்களில் தின்பண்டங்கள் விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அறநிலைய துறை ஊழியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள்கள், கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி, உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் பிரதமர் நதேந்திர மோடி, ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்ச்சி, தமிழகத்தில் 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். இதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல என்றும், இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் அல்ல... மதம் சார்ந்த ஆன்மீக நிகழ்ச்சி தான். அறநிலைய துறை எந்த விதிகளையும் மீறவில்லை என விளக்கமளித்தார்.

    ஹிஜாப்புக்கும், வேட்டிக்கும் போராடுவது வேதனையளிக்கிறது - உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி



    தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில்களில், தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாக கருத முடியாது என உத்தரவிட்டனர்.


    பிரதமரின் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதேபோல ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோவில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Modi

    அடுத்த செய்தி