முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சி கொண்டு ஹரியானாவில் பிடித்த தனிப்படை போலீசார்!

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சி கொண்டு ஹரியானாவில் பிடித்த தனிப்படை போலீசார்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மேலும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள பணம் மற்றும் பணப்பரிவர்த்தனையை அந்தந்த வங்கி கிளை மேலாளர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

சென்னை முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களை மட்டுமே குறிவைத்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவத்தின் புகார்கள் சென்னை, காவல் நிலையங்களில் கடந்த சில நாட்களில் குவிய தொடங்கின. குறிப்பாக, வடபழனி, கீழ்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ, ஏ.டி.எம்-களில் நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர்.

சோதனையில் 2 மர்ம நபர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களுக்குள் சென்று பணம் டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களை மட்டுமே குறியாக வைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இரண்டு நபர்களும் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

குறிப்பாக போலீசாரின் விசாரணையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் நிலையங்களில் டெபாசிட் செய்யப்படும் மெஷின் ஆனது ஜப்பானை சேர்ந்த ஓ.கே.ஐ.(OKI) என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதும் அந்த OKI மெஷினில் பணமெடுக்கும் பகுதியிலுள்ள சென்சார் 20 வினாடிகள் மட்டும் பணத்தை சோதனை செய்யும் எனவும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்கும்போது சென்சாரில் கை அல்லது வேறு ஏதேனும் பொருளை வைத்து மறைத்தால் அப்போது எடுக்கப்படும் பணத்தை அவை கணக்கில் கொள்ளாமல் வங்கியிலேயே அதற்கான இருப்புத் தொகையை சேர்த்து விடுவதும் தெரியவந்தது.

இந்த முறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் நிலையங்களில் பயன்படுத்தப்படும் OKI நிறுவனத்தை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக கொள்ளையர்கள் சென்னையில் கடந்த சில வாரங்களாக வேப்பேரி, வடபழனி, தி.நகர் போன்ற பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி எங்கெங்கெல்லாம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் நிலையங்களில் OKI மெஷின்கள் இருக்கிறதென ஒரு பட்டியலை தயார் செய்து பின்பு தனியான நேரங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஒரு காவல் துணை ஆணையர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஹரியானா சென்று கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரப் படுத்தப் பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணனுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின்படி SBI டெபாசிட் மெஷினில் பணம் எடுக்க SBI நிர்வாகம் தடை விதித்தது. மேலும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள பணம் மற்றும் பணப்பரிவர்த்தனையை அந்தந்த வங்கி கிளை மேலாளர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் நேற்று மாலை வங்கியின் கிளை மேலாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏ.டி.எம்-களில் சென்று சோதனை செய்தபோது பல ஏ.டி.எம்-களில் கொள்ளைச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக பெரியமேட்டில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.-இல் 190 முறை ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூபாய் 16 லட்சம் கொள்ளை நடந்திருப்பதும், அதேபோல கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையில் உள்ள ஈகார்னர் சென்டரில் ரூபாய் 1,30,000 கொள்ளை நடந்திருப்பதும், தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் செண்டரில் ரூபாய் 70 ஆயிரமும், தரமணி பேபி நகரில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் ரூபாய் 2 லட்சமும் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

Also read: எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இப்படி ஒரு வீக்னஸா? - கைவரிசை காட்டிய வட இந்திய கொள்ளையர்கள்

இதற்கிடையே ஹரியானா சென்ற தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சி பதிவில் பதிவான நபர் ஒருவரை அடையாளம் கண்டு அவரை பிடித்தனர். அந்த நபரை, ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்து ஒரு  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் குறித்து மற்றொரு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த கொள்ளைக் கும்பல் சென்னையில் மட்டும் இந்த கொள்ளை சம்பவங்களை நடத்தினார்களா? அல்லது தமிழகம் முழுவதும் பல பிரிவுகளாக பிரிந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினார்களா? என்பது குறித்தும் வேறு மாநிலங்களிலும் இவர்கள் இதே போன்று கைவரிசையை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சென்னையில் மட்டும் 16 எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் கொள்ளை நடந்து இருப்பதாகவும் அவற்றில் 7 கொள்ளை சம்பவத்திற்கான ஆவணங்கள் காவல்துறையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது வரை வந்த புகார்களின் அடிப்படையில் இந்த கொள்ளையர்கள் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் சென்னையில் மட்டுமே கொள்ளையடித்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டே இருப்பதால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: ATM, Chennai, Crime | குற்றச் செய்திகள், Robbery, SBI ATM