பெரியார் சிலை அவமதிப்பு: 'கொள்கையால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள்' - ராமதாஸ்..

மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்

பெரியார் சிலை அவமதிப்பு: 'கொள்கையால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்தான் இந்த இழிசெயல்களை செய்வார்கள்' - ராமதாஸ்..
பெரியார் சிலை அவமதிப்புக்கு ராமதாஸ் கண்டனம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 12:20 PM IST
  • Share this:
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர்
மீது கடுமையான நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோழைத்தனமான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.


அண்மைக்காலமாகவே கொள்கை அடிப்படையில் எதிர்கொள்ள முடியாத தலைவர்கள் மீது காவிச் சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும், சிலையின் பாகங்களை சேதப்படுத்தியும் அவமதிப்பது அதிகரித்து வருகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலை கூட இதற்கு தப்பவில்லை. சிலர் இத்தகைய செயல்களை செய்து அதன் மூலம் தங்களின் முகத்தில் தாங்களே கருப்பு சாயத்தை பூசிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ள முடியாத கோழைகளும், மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களும் தான் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களை தப்பவிடக் கூடாது.

மேலும் படிக்க: பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..

அண்மையில் கோவையில் தந்தை பெரியாரின் சிலையை அவமதித்தவர்கள் மீதும், இந்து மதம் குறித்து தவறாக பேசியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகும் இத்தகைய செயல்களில் ஈடுபட சில மிருகங்கள் துணிகின்றன என்றால், அவர்களின் பின்னணியில் மிகப்பெரிய சக்திகள் இருக்கின்றன என்று தான் அர்த்தம். தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து, நல்லிணக்கத்தை சிதைத்து அரசியல் லாபம் தேடும் சக்திகள் தான் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய செயல்களை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது.சிலைகளை அவமதிப்பவர்களை விட, அவ்வாறு செய்யும்படி மற்றவர்களை தூண்டுபவர்கள் தான் மிகவும் கொடியவர்கள்; ஆபத்தானவர்கள். அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களின்படியும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உளவுத்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading