தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே 6 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைந்துள்ளது. அந்த சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் காவி துணி மற்றும் தலையில் தொப்பி அணிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று அதிகாலை அந்த பக்கம் சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும், மேலும் கல்லூரி மற்றும் அருகில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மர்மநபர்கள் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
தேர்தல் நடக்கும் சமயத்தில் பெரியார் சிலைக்கு காவி துணி போடப்பட்ட சம்பவம் திராவிட கழகத்தினர் மற்றும் அப்பகுதி வாழ் மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலை அமைந்திருக்கும் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்யும் செயல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகளைக் கண்டுபிடித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.