பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் - திருமாவளவன் கண்டனம்

திருமாவளவன் கண்டனம்

”பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுள் இருவர் எஸ்.சி பிரிவையும் , ஒருவர் எம்.பி.சி பிரிவையும் சேர்ந்தவர்கள். மூவருமே சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் மூவரும் எந்தவொரு புகாருக்கும் ஆளாகாதவர்கள். அப்படியானவர்களை இடமாற்றல் செய்து தண்டிப்பது ஏற்புடையதல்ல.”

 • Share this:
  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் காவலர்கள் மூவரையும் மீண்டும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இது தொடர்பாக, விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அதற்காக அவர்கள் மூவரையும் பழிவாங்கும் நோக்கோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மூவரையும் மீண்டும் கடலூரிலேயே பணியாற்ற ஆணையிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

  ALSO READ |  நடப்பு நிதியாண்டில் தமிழகம் இதுவரை ₹ 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது - கடந்த ஆண்டை விட 107% அதிகம்

  பெரியார் சிலைக்கும் , அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவி சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்பவர்களைக் கைது செய்ய- தண்டிக்க முன்வராத தமிழக அரசு, இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரையும் தண்டித்திருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது.

  குறிப்பிட்ட காவலர்கள் மூவரும் தங்கள் பணி நேரத்திலோ சீருடையிலோ இதைச் செய்யவில்லை. அவர்கள் செய்தது எந்த விதத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காத்தவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது குற்றம் என்று தமிழக அரசு கருதுகிறதா? இதைத் தமிழக முதல்வர் தெளிவுபடுத்தவேண்டும்.

  ALSO READ |   ₹ 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்... அதிர்ச்சியில் சசிகலா... பரபர பின்னணி...!

  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்களுள் இருவர் எஸ்.சி பிரிவையும் , ஒருவர் எம்.பி.சி பிரிவையும் சேர்ந்தவர்கள். மூவருமே சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் மூவரும் எந்தவொரு புகாருக்கும் ஆளாகாதவர்கள். அப்படியானவர்களை இடமாற்றல் செய்து தண்டிப்பது ஏற்புடையதல்ல.

  பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் மூவரையும் மீண்டும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டுமெனவும் தங்களின் ஆட்சி பெரியார் வழிவந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் பெயரில் இயங்கும் ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் விசிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: