திருச்சியில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்ற கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். உறையூர் சாலை - டாக்டர் சாமிநாத சாஸ்திரி சாலை சந்திப்பில் தொடங்கிய கருஞ்சட்டை பேரணி, தென்னூர் உழவர் சந்தை அருகேயுள்ள மாநாட்டு திடல் வரை சென்றது. இதில் 160 அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணிக்குப் பின் தென்னூர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி திடலில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது.

கருஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்றோர்.
இதில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஆனைமுத்து, கோவை ராமகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், தமிழின உரிமைகளை மீட்பதற்காகவும் இந்தக் கருஞ்சட்டை பேரணி நடைபெறுவதாக பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்தனர். பறையிசை முழங்க தொடங்கிய இந்தப் பேரணியில் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.