தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு!

மாதிரிப் படம்

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் விதிதம் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 6 சதவீதம் குழந்தைகளாக இருந்தனர். இந்த தொற்று விகிதம் மெல்ல மெல்ல அதிகரித்து ஆகஸ்ட் மாதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 20 ஆயிரத்து 326 பேருக்கு தமிழகத்தில் தொற்று ஏற்பட்டது. இதில் 6 சதவீதம் அதாவது 1224 பேர் குழந்தைகள் ஆவர்.  அதே போன்று பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பாதிப்பில் 6 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த பாதிப்பு மெல்ல அதிகரித்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 7.2 சதவீதமாக இருந்தது.

மே மாதம் இரண்டாவது அலையின் உச்ச பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்தில் 73 ஆயிரத்து 555 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பில் 7.7 சதவீதமாக இருந்தது. அதன்பின் கொரோனா பாதிப்பு மாநில அளவில் குறைந்தாலும் கூட பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. ஜூன் மாதம் தமிழகத்தில்  3 லட்சத்து 83 ஆயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் இதில் 8.8% குழந்தைகள் ஆவர்.

இதே போன்று தொடர்ந்து அதிகரித்து ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 10.2 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 5,170 பேர் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தீவிர குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக மிக குறைவு என்றும் குழந்தைகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை இணை நோய்கள் ஏற்படக் கூடியவை என்றும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மேலாண்மை குழுவின் உறுப்பினர் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் கூறுகிறார்.

இதையும் படிங்க: குணமடைந்த மனநல நோயாளிகள் கீழ்ப்பாக்கத்தில் நடத்தும் கஃபே


இது தொடர்பாக அவர் கூறுகையில்," கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக மட்டுமே குழந்தைகள் இறப்பது என்பது மிகமிக அரிதானதாகும். புற்றுநோய் உள்ளிட்ட இதய நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தாக்கும்போது வைரஸ் உடம்பில் ஏற்கனவே உள்ள இணை நோயை தீவிரப்படுத்துகிறது அதன் காரணமாக உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளது. ஆனால் அது லேசான சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு மட்டுமே ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகமாகும்போது குழந்தைகள் மேலும் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று குழு உறுப்பினர் மற்றும் மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மருத்துவர் சீனிவாசன்  கூறுகிறார். " இந்திய அரசின் கணிப்பு படி மூன்றாவது அறையில் 12% வரை குழந்தைகள் பாதிக்கப்படலாம். ஆனால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 5% பேருக்கு மட்டுமே மருத்துவமனை வசதி தேவைப்படும்.

மேலும் படிக்க: டெங்கு, ஜிகா காய்ச்சலால் எவ்வளவு பேர் பாதிப்பு?


எனவே தற்போது பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் இருக்கக்கூடிய எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நான்கு முதல் எட்டு குழந்தைகள் மட்டுமே உள்நோயாளிகளாக தற்போது உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயரவில்லை. எனவே அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்திருக்கலாம்" என்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
(
மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை கையாள்வதற்காக தமிழகத்தில் 12,000 முதல் 15,000 படுக்கைகள் வரையும்  அதில் 3,800 ஐ சி யு  படுக்கைகளும் உள்ளன. தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்குவதற்கு என பிரத்தியேகமாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: