Home /News /tamil-nadu /

பேரறிவாளனுக்கான பரோல் டிசம்பர் 7-ம் தேதிவரை நீட்டிப்பு

பேரறிவாளனுக்கான பரோல் டிசம்பர் 7-ம் தேதிவரை நீட்டிப்பு

பேரறிவாளன்

பேரறிவாளன்

பேரறிவாளனுக்காக பரோலை டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானம், ஆளுநர் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறது. இந்தநிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 9-ம் தேதி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. நவம்பர் 9-ல் பரோல் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 23-ம் தேதி மீண்டும், 2-வது முறையாக பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் தரப்பில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மேலும் 90 நாட்கள் பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு, தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசுத் தரப்பில், 'இரண்டு வருட காலத்துக்கு 30 நாட்கள் பரோல் வழங்க அனுமதி உள்ளது. ஆனால், பேரறிவாளனுக்கு நவம்பர் 9 முதல் வழங்கப்பட்டுள்ள பரோலையும் சேர்த்து அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
    மேலும், பேரறிவாளன் 25 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் 200 கி.மீ தூரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது' என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு சிறுநீரகத்தில் 25% அடைப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை பெற 4 வாரமாவது பரோல் தேவைப்படுகிறது. எனவே, குறைந்தது 4 வாரத்துக்காவது பரோலை நீட்டிக்க வேண்டும்' எனக் கோரினார்.

    அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பரலோடு கூடுதலாக ஒரு வாரத்துக்குப் பரோலை நீட்டித்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும், பரோலை நீட்டிப்பது இதுதான் கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதேபோல, அருகில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனுக்கு அறிவுறுத்தினர். இந்த உத்தரவால் பேரறிவாளனின் பரோல் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Perarivalan

    அடுத்த செய்தி