பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் நிர்வாகத்தில், பெரியசாமி மலை அடிவாரத்தில் பெரியசாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்கள் உள்ளன. அங்குள்ள பெரியசாமி, செல்லியம்மன், செங்கமலையன், நீலியம்மன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 சுடுமண் சிலைகள் அக்டோபர் 5ம்தேதி உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராம பகுதியில் இருந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 கல் சிலைகளும், உடைக்கப்பட்டிருந்தன. அதோடு, கற்சிலைகளின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகள், காசுகள் திருடப்பட்டிருந்தன. மேலும், சிறுவாச்சூர் முருகன் கோவிலில், குதிரை மற்றும் மயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்தத் தொடர் சிலை உடைப்புகளால் அதிர்ச்சியடைந்தனர் .சிலைகள் உடைப்பு குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், பெரியசாமி கோயில் பக்கம் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த நபரைப் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் தான் சிலைகளை உடைத்தவர் என்பது தெரியவந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த 35 வயதான நடராஜன் என்கிற நாதன் என்பது விசாரணையில் தெரியவந்தது. சிலைகளின் அடியில் உள்ள எந்திரத் தகடுகளை வீட்டில் வைத்தால், செல்வம் கொழிக்கும்; பணமழை கொட்டும்; குடும்பம் சுபிட்சமாகும் என நினைத்துள்ளார் நடராஜன்.
அதற்காக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள கோயில்களைத் தேர்ந்தெடுத்து இரவு நேரங்களில் சிலைகளை உடைத்து அவற்றின் அடியில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகளைத் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மட்டுமின்றிர், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கால் நாட்டான்புலியூர் கிராமத்திலுள்ள பதஞ்சலீஸ்வரர் கோவிலில் இருந்த மூன்று சாமி சிலைகளை அப்புறபடுத்தி அவற்றின் அடியிலிருந்த எந்திர தகடுகளை திருடியதும், மின் மோட்டர், குழாய், பீஸ்கேரியர் ஆகியவைகளை சேதபடுத்தியதும் தெரியவந்தது
அதேநேரம் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News