ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?

இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?

பால்ராசு

பால்ராசு

நகை பணத்துக்காக பல பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். தேவையில்லாமல் இதையெல்லாம் கேட்காதே உன்னை நல்ல முறையில் நான் பார்த்துக்கொள்கிறேன்.

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :

  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெயரை மாற்றி பல பெண்களை திருமணம் செய்து, அவர்களுடன் சில மாதங்கள் வாழ்க்கை நடத்தி விட்டு, நகை, பணத்தை மோசடி செய்ததுடன், அவர்களது வாழ்க்கையையும் சீர்குலைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரம்பலூர் வாலிபரை  போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.

  பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் பூவழகி(22). இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனக்கும் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -பச்சையம்மாள் தம்பதியினரின் மகன் பால்ராசு(25) என்பவருக்கும்,  இருவீட்டார் சம்மதத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் இந்து சாஸ்திர சம்பிரதாயப்படி கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது.  மேற்படி திருமணத்தின் போது, எனக்கும் பால்ராசுக்கும் சேர்த்து 5 சவரன் நகையும், வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களையும் கொடுத்தனர். மேலும் எனது பெற்றோர் சிறிது காலம் கழித்து பத்து சவரன் தங்க நகையும் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ரூ.1லட்சம் பணமும் தருவதாக கூறியிருந்தனர்.

  இந்நிலையில் எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் மட்டுமே பென்னகொணம் கிராமத்திலுள்ள பால்ராசு வீட்டில் கணவன்-மனைவியாக இருவரும் வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவர் வீட்டில் இருந்த போது, எனது கணவர் பால்ராசுவின் செல்போனில், ஏராளமான பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோவை என்னிடம் காட்டினார்.  இவர்களெல்லாம் யார் என்று கேட்டதற்கு, உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நகை பணத்திற்கு ஆசைப்பட்டு நான் பல பெண்களிடம் என் பெயரை மாற்றி சொல்லி ஆங்கங்கே திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். தேவையில்லாமல் இதையெல்லாம் கேட்காதே உன்னை நல்ல முறையில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.

  Also Read: மாஸ் அருள்வாக்குக்கு திட்டம் போட்ட அன்னபூரணி அம்மா.. கட்டம்கட்டிய போலீஸ்

  நானும் அவரது பேச்சை நம்பி அவருடன் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் திடீரென ஒருநாள் உன் பெற்றோரிடம் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் பணமும், 10 சவரன் தங்க நகையும், வாங்கி வரவேண்டும் என்று கூறி என்னை, எனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றார். அப்பொழுது என் பெற்றோர் இவ்வளவு தொகை உடனே கொடுக்க முடியாது என்றும், எங்களுக்கு மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்றும், எனவே தற்போது ரூ.50 ஆயிரம் மட்டும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறினார்கள்.

  உங்கள் மகளுடன் நான் குடும்பம் நடத்த வேண்டுமென்றால் ரூ.3 லட்சம் ரொக்கப் பணமும் பத்து சவரன் தங்க நகையும் ரெடி செய்துவிட்டு சொல்லுங்கள் அப்பொழுது வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு எனது கணவர் பால்ராசு சென்றுவிட்டார். நான் பலமுறை எனது கணவர் பால்ராசுவின் செல் நம்பருக்கு போன் செய்த போது அவர் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் உங்கள் பெற்றோரிடம் சொன்னபடி பணத்தையும் நகையையும் ரெடி பன்னினால் நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். ஆனால் நான் போனில் பேசும் பொழுது அவர் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போல தெரியவில்லை வேறு சில பெண்களின் பேச்சு குரலும் இடையிடையே கேட்டது. இதனால்  மீது, எனக்கு மேலும் சந்தேகம் எழுந்தது.

  வீடு தேடி வந்த போலீஸ்:

  இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் நிலையத்தில் இருந்து எங்களது வீட்டிற்கு போலீசார் வந்து என் கணவர் எங்கே என்று கேட்டனர். ஏன்  என்று கேட்டதற்கு உன் கணவர் சிவகங்கை மாவட்டம் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்கிற பிரியதர்ஷினி என்ற மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்ர் அது குறித்த புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது காரைக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.

  Also Read: அரசுப்பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

  மேலும் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணை திருமணம் செய்ததில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே எப்படியோ எனது செல் நம்பரை தெரிந்துகொண்ட பிரதீபா எனக்கு போன் செய்து ஏற்கனவே தன்னை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பால்ராசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், ஒவ்வொரு பெண்களிடமும் தனது பெயரை மாற்றிக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.நகை பணத்திற்கு ஆசைப்பட்டு, அவர் பல பெண்களை திருமணம் செய்து, சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த தோடு பணம் நகையை எடுத்து சென்று விடு சென்று விடுவார் என்றும் தெரிவித்தார். தானும் அது போல எமாற்றப்பட்டு விட்டதாகவும் பிரதீபா கூறினார்.

  இது போல பல பெண்களை சீரழித்த பால்ராசு என்னுடைய வாழ்க்கையும் சிரழித்து விட்டார். மேலும் தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறார். நான் தற்பொழுது வாழ்வதா சாவதா என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன் எனவே பால்ராசு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பல பெண்களுடன் எடுத்துக்கொண்டு போட்டோக்களையும் கொடுத்துள்ளார். பூவழகி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயசித்ராபோலீசார், மோசடி பால்ராசு மீது, 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்தனர்.

  போலீஸாருக்கு தண்ணி காட்டிய வாலிபர்: 

  இந்நிலையில், தொடர்ந்து பால்ராசுவை பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்த நிலையில், அவர் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்துள்ளார். காரணம் அவர் தனது செல்போனில் இருந்து சிம் கார்டை கழட்டி விட்டு, வேறு ஒரு புதிய செல்போன் எண்ணின் நெட்வொர்க் டேட்டாவை பயன்படுத்தி, வாட்ஸ் மூலமாகவே போன் செய்து பேசுவது, தகவல் அனுப்புவது போன்ற செயல்களை செய்துள்ளார். இதனால் போலீசாரால் உடனடியாக பால்ராசுவை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவரை பொறி வைத்து பிடிக்க நினைத்த மகளிர் போலீசார், பூவழகியை துருப்புச்சீட்டாக பயன்படுத்த திட்டம் தீட்டினர். பூவழிகி மூலமாக பால்ராசுவின் புதிய செல் நம்பரை பெற்று, அவரிடம் பேச வைத்துள்ளனர்.

  Also Read:  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்து விட்டன: அன்புமணி ராமதாஸ்

  நான் உன்னை பார்க்க வேண்டும், உன்னுடன் சேர்ந்த வாழ ஆசைப்படுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார் பூவழகி. இதனை நம்பிய பால்ராசு தனியாக சென்னைக்கு வா நான் உன்னை அழைத்துச்சென்று வேறு வீடு எடுத்து தங்கவைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பூவழகி அவரது உறவினர்கள் மற்றும் அனைத்துமகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான 4 பேர் கொண்ட போலீசாருடன் தனித்தனி வாகனங்களில் சென்னைக்கு சென்றுள்ளனர்.

  பால்ராசுவை தேடி பூவழகி சென்னை பயணம்: 

  அப்போது, வாட்ஸ் மூலமாகவே பூவழிகியை தொடர்பு கொண்டு பேசிய பால்ராசு, சென்னை கோயம்பேடுக்கு பஸ் டிக்கெட் எடுக்க சொல்லியிருக்கிறார். அந்த டிக்கெட்டை தனக்கு வாட்ஸ்மூலம் போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். பேருந்தில் பயணிப்பதை செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீடியோ கால் பேசி அவர் தனியாக வருகிறாரா அல்லது உடன் உறவினர்கள் மற்றும் போலீசார் வருகிறார்களா என்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து விழுப்புரத்தில் இறங்கி காஞ்சிபுரத்திற்கு டிக்கெட் எடுத்து காஞ்சிபுரம் வருமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிறகு ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் சென்னை பஸ் ஏரி செங்கல்பட்டுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றுதெரிவித்து அதற்கான டிக்கெட் போட்டோவையும் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

  Also Read: 'தூக்கி அடிச்சிருவேன்' - போலீஸ் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

  இதற்கெல்லாம் ஏதேதோ சாக்கபோக்கு சொல்லி போலீசாரின் யோசனை படி சமாளித்த பூவழகி, ஒரு வழியாக செங்கல்பட்டில் இறங்கியுள்ளார். அவரை மேம்பாலம் அருகே வரச் சொல்லியுள்ளார் பால்ராசு. அவர் கூறிய படி, செங்கல்பட்டில் இறங்கி மேம்பாலம் அருகே வந்துவிட்டதாக தகவல் கொடுத்த பூவழியிடம், இடது புறம் திரும்பு, வலது புறம் திரும்பு நேராக வா என்று சினிமா பாணியில் மாறி மாறி அலைய வைத்திருக்கிறார். ஒருவழியாக பாலத்தின் மேல் பகுதிக்கு போகச்சொல்லி விட்டு பிறகு கீழே இறங்கி வருமாறு தெரிவித்துள்ளார். அவர் கூறிய தவகல்களை அவ்வப்போது, மறைந்து நின்று மாற்று உடையில் சென்றிருந்த போலீசார் பால்ராசு நிற்கும் இடத்திற்கு சென்றனர். ஒரு போலீசார் மட்டும் சென்று விலாசம் கேட்பது போல, பால்ராசுவிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மாஸ்க் மற்றும் மங்கி குல்லாய் போட்டிருந்த பால்ராசு, பதில் சொல்ல மறுத்துள்ளார்.  எப்படியோ பேச்சு கொடுத்த போலீசாரிடம் தன் பெயர் பால்ராசு என்று தெரிவித்துள்ளார்.

  பொதுமக்களிடம் சிக்கிய பால்ராசு:

  இதனையடுத்து அங்கு மறைந்து நின்ற ஆய்வாளர் ஜெயசித்ரா பால்ராசுவை பிடித்த போது, கையை தட்டி விட்டு தப்பியோடியுள்ளார். சமயோகிதமாக யோசித்த ஆய்வாளர் ஜெயசித்ரா, அவர் குற்றவாளி என்றும் அவரை பிடியுங்கள் என்று கூறினால் பொதுமக்கள் அச்சப்படுவார்கள் என்று கருதி, என் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடுகிறான் அவனை பிடியுங்கள் என்று கத்தியுள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும்  பால்ராசுவை விரட்டி பிடித்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு மேம்பால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

  அதனையடுத்து, அவரை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் கொண்டு வந்த போலீசார், நடத்திய தீவிர விசாரணையில், பிரதீபாவை தனது தங்கை என்று தெரிவித்துள்ளார். ஆனால், பிரதீபாவின் செல்நம்பரில் போலீசார் பேசியபோது, பால்ராசு கைது செய்யவதற்கு முன்பு வரை தன்னுடன் இருந்ததாகவும், பால்ராசு தன்னை திருமணம் செய்து கொண்டதில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்கள் இருவரும் செங்கல்பட்டில் வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பால்ராசுவை கைது செய்த போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதித்து சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் கல்யாண மன்னனை கைது செய்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : ராஜவேல் (பெரம்பலூர்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cheating, Crime News, Love marriage, Money, Sexual abuse, Tamil News