நகரப்பேருந்தில் நடத்துனரை தாக்கிய வடமாநில பயணிகள்.. டிக்கெட் கேட்டதால் விபரீதம்.. ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்..
பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து, பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப்பேருந்து, இதை நேற்று காலை ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மற்றும் நடத்துனர் ஆறுமுகம் (வயது- 50) ஆகியோர் பேருந்தை இயக்கி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் சிறுவாச்சூர் கிராமத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் முன்பக்க படிக்கட்டில் மூன்று பேரும் பின்பக்க படிக்கட்டில் மூன்று பேரும் ஏறி பயணம் செய்துள்ளனர் .
இதில் நடத்துனர் ஆறுமுகம் அவர்களிடம் டிக்கெட் கேட்டபோது முன் பக்கம் இருந்தவர்கள் பின் பக்கம் எடுப்பார்கள் என்றும் பின் பக்கம் இருந்தவர்கள் முன்பக்கம் எடுப்பார்கள் என்றும் முரண்பாடாக பேசியதில் அவர்கள் இறங்கும் இடமான விஜயகோபலபுரம் வந்துவிட்டதால் டிக்கெட் எடுக்காமல் இறங்கியுள்ளனர். அவர்களை மறித்து நடத்துனர் ஆறுமுகம் டிக்கெட்டை காட்டுங்கள் என்று கேட்டபொழுது பயணம் செய்த 6 பேரும் நடத்துனரை தாக்கி கீழே தள்ளி உள்ளனர்.

நடத்துனர் ஆறுமுகம்
இதில் பேருந்தில் இருந்து சாலை ஓரத்தில் கீழே விழுந்த ஆறுமுகம் தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் கிடந்துள்ளார், தாக்கியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.ஓட்டுனர் மற்றும் பயணிகள் உதவியுடன் நடத்துனர் ஆறுமுகம் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அபிநந்தன் குமார்தாஸ்
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதால், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விஜயகோபலபுரம் பகுதியிலுள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும், இதில் அபிநந்தன் குமார்தாஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இவருடன் பயணித்த மற்ற அனைவரையும் தேடி வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் டிக்கெட் கேட்டதால் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் - ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.