பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ஊதாரித்தனமாக சுற்றி வந்ததை தட்டிக்கேட்ட மனைவியை ஊதாங்கோலால் அடித்து கொண்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சேர்ந்த ஆறுமுகம்(50). இவரது மனைவி முத்துலட்சுமி(45) இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. ஒரு மகளுக்கு திருமணமான நிலையில் மற்ற 3 பிள்ளைகளும் இவர்களுடன் வசித்த வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி முத்துலட்சுமி சேமித்தும், இடம் மற்றும் நிலம் வாங்கியும் வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பிய ஆறுமுகம், தனது சம்பாத்தியத்தில் மனைவி முத்துலட்சுமி சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் சொத்துக்களை ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆறுமுகம் மாதக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு பிறகு மீண்டும் திரும்பி வருவாராம்.
இந்நிலையில் நேற்று மதியம், வீட்டில் கோழி குழம்பு வைப்பதற்காக, முத்துலட்சுமி வீட்டில் இருந்த கோழியை அடித்து சுத்தம் செய்துள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த ஆறுமுகம் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிப்போகவே, அருகில் இருந்த ஊதாங்கோல் மற்றும் கட்டையை எடுத்து தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முத்துலட்சுமி அதே இடத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய ஆறுமுகம் அருகேயுள்ள ஆடுதுறை கிராமத்தில் மறைவான பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், மங்களமேடு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைமக்கு அனுப்பி வைத்து, ஆறுமுகம் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊதாரித்தனத்தை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் ஊதாங்கோலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஆர்.ராஜவேல் (பெரம்பலூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.