பெரம்பலூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரிக்கரை உடைந்து பயிர்கள் சேதம்.. வேதனையில் மக்கள்

Youtube Video

பெரம்பலூர் மாவட்டம், அரசலூரில் கரை உடைந்து ஏரி நீர் வெளியேறியதில், விளைநிலைங்கள் பாழாகின... அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே ஏரிக்கரை உடைந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 • Share this:
  பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசலூரில், பச்சைமலை அடிவாரத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருக்கிறது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், சுமார் 50 முதல் 70 ஏக்கர் ஏரியை, தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த ஏரியின் உள்ளே, கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டி, மேற்புறத்தில் சுவர் எழுப்பி உள்ளனர்.

  கடந்த 2 மாதமாக பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் நிம்பிய நிலையில், ஏரிக்கும் குடிநீர் கிணறுக்கும் இடையே மண் உள்வாங்கி, பல நாட்களாக நீர் கசிந்துள்ளது. இந்நிலையில் கரை உடைந்து, வழியில் உள்ள அனைத்தையும் வாரிச்சென்றது ஏரி தண்ணீர்.

  ஏரியில் நீர் கசிவது குறித்து பல முறை கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலேயே இந்நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர் இவ்வூர் மக்கள். ஏரியின் கரை உடைந்ததில், அரசலூர் கிராமத்தின் மேற்கு மற்றும் வடக்குப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், வேர்க்கடலை, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வயல்கள், கிணறுகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு மண் மூடியுள்ளது. ஏரி நீர் வீடுகளிலும் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க...  உங்கள் தொகுதி: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  இந்த சேதம் ஒருபக்கம் இருக்க, ஏரியில் இருந்த மொத்த நீரும் வெளியேறி விட்டதால் குடிநீர் ஆதாரத்தையும், பாசன ஆதாரத்தையும் இழந்துள்ளது அரசலூர். எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கி தங்களை காப்பாற்ற வேண்டுமென, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  வீடியோ

   


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: