மாடுகளுக்கு வேகமாக பரவும் பெரியம்மை நோய் - விவசாயிகள் வேதனை

Youtube Video

காற்றின் மூலம் பரவும் இந்த நோயால், மாடுகளின் உடல் மற்றும் கால் பகுதிகளில் கொப்புளம் ஏற்படுவதுடன், 2 நாட்களானாலும் எழுந்திருக்க முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 • Share this:
  பெரம்பலூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் வேகமாக பரவி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு சிறப்பு முகாமை நடத்தி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த போது, ஆந்திராவில் கால்நடைகளுக்கு உருவான பெரியம்மை நோய், தமிழகத்துக்கும் பரவியது. பின்னர் நிலைமை சீரடைந்த நிலையில், மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சி காரணமாக, தற்போது பெரியம்மை நோய் எனப்படும் தோல் தடிப்பு நோய், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பரவிவருகிறது.

  காற்றின் மூலம் பரவும் இந்த நோயால், மாடுகளின் உடல் மற்றும் கால் பகுதிகளில் கொப்புளம் ஏற்படுவதுடன், 2 நாட்களானாலும் எழுந்திருக்க முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவலால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், பால் உற்பத்தியும் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற அதிக செலவாவதாகவும், அரசு துரித நடவடிக்கை எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வேப்ப எண்ணெய் கொடுத்தாலே ஓரளவுக்கு நோய் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்தனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மற்றும் தொண்டையில் அம்மையின் தாக்கம் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நோயால், பால் உற்பத்தி குறையாது என்றும், உயிரிழப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: