தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், கந்துவட்டி, நிலஅபகரிப்பு இவைகள் எல்லாம் இல்லாமல் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தூத்துக்குடியில் நடந்த பரப்புரையில் பேசினார்..

 • Share this:
  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சந்திரன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆறுமுகநயினார் ஆகிய இருவரை ஆதரித்து தூத்துக்குடியில்  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அமமுக தொண்டர்கள் வீரவாள் பரிசளித்து உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் பேசிய அவர் தமிழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி துப்பாக்கிச்சூடு ஆட்சி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து இன்னும் விசாரணை கமிட்டி விசாரணை செய்து வருகிறது.

  உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் அதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மே 2-ஆம் தேதிக்கு பிறகு தண்டிக்கப்படுவார்கள்,  தண்டிக்கப்பட வேண்டும்.

  திமுக தலைவர் சொல்கிறார் தமிழகத்தில் திமுக அலை வீசுகிறது, பேரலை வீசுகிறது, தற்போது சுனாமி ஆகி விட்டது என்கிறார். சுனாமி தீயது அதனால் தான் திமுகவை தீயசக்தி என்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சுனாமி போன்று ஆபத்து வந்துவிடும் என்று தனது மனதில் இருக்கும் வார்தையை சொல்கிறார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டுமென்றால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், கந்துவட்டி, நிலஅபகரிப்பு இவைகள் எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

  மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று இன்று பிரதமர் மோடி பேசுகிறார் அதனால் தான் நீட் தேர்வை தடை செய்யவில்லை,  துப்பாக்கி சூடு நடந்தது. இனக்கமாக இருப்பதால் தான் காப்பாற்றி கொண்டு இருக்கின்றனர். இல்லையென்றால் என்னவாகியிருக்கும் (துப்பாக்கிசூடு) குற்றவாளிகள் யார்? அந்த துறைக்கு அமைச்சர் யார்? எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். குருவியை சுடுவதுபோல் சுட்டால் மக்கள் விட்டுவிடுவார்களா? ஜாலியன் வாலாபாக் போன்ற சம்பவம் இங்கு நடந்துள்ளது என்றார்.

  முடிவில் தூத்துக்குடி தொகுதியின் தேவைகளை நிறைவேற்றித் தர நமது வேட்பாளர் சந்திரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தனது பேச்சை நிறைவு செய்து புறப்பட முயன்றார். அப்போது அவரது பிரசார வாகனத்தை சூழ்ந்து நின்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் டிடிவி தினகரன் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் ஆறுமுகநயினாருக்கு வாக்கு கேட்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து மைக்கில் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் ஆறுமுகநயினாருக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

  முரளி கனேஷ் - தூத்துக்குடி செய்தியாளர்
  Published by:Arun
  First published: