• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டதாக சான்றிதழ்.. சுகாதாரத்துறை குளறுபடியால் பொதுமக்கள் குழப்பம்..

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டதாக சான்றிதழ்.. சுகாதாரத்துறை குளறுபடியால் பொதுமக்கள் குழப்பம்..

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

வெளியூர்களில் பணி செய்யும் இளைஞர்களுக்கு அவரவர் சொந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
வெளியூர்களில் பணி செய்யும் இளைஞர்களுக்கு அவரவர் சொந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது வரை 3 பேருக்கு அது போன்று சான்றிதழ் கிடைக்கப்பட்டுள்ளது குறித்து நியூஸ்18க்கு தகவல் கிடைத்துள்ளது.

முதல் டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சரியான விவரங்கள் கிடைத்துள்ளன. மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்நிலையில், அவர்களின் செல்போன்களுக்கு அவர்கள் இரண்டாவது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கும் போது 'நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளீர்- you are fully vaccinated' என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தற்போது எப்படி இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 25 வயது முத்துக்குமரன் ஜூலை 26ம் தேதி கிள்ளியூரில் முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு இரண்டாவது டோஸ் கிள்ளியூரிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமுள்ள ஆசனூரில் இரண்டாவது டோஸ் அக்டோபர் 25ம் தேதி போட்டதாக குறுஞ்செய்தியும் சான்றிதழும் கிடைத்துள்ளது. "நான் அக்டோபர் 25ம் தேதி சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். எப்படி நான் செலுத்தியதாக சான்றிதழ் வரும்? எனக்கு பக்கத்து ஊரில் தடுப்பூசி செலுத்தியதாக வந்துள்ளது. எனவே உடனே யாரிடமும் விசாரிக்க முடியவில்லை" என்றார்.

இதே போன்று தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது அப்ரோஸ். அவர் மாரண்டஹள்ளி கிராமத்தில் ஜூன் 21ம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார். அவரது சொந்த கிராமத்துக்கு அருகில் உள்ள பஞ்சப்பள்ளி என்ற கிராமத்தில் அக்டோபர் 29ம் தேதி இரண்டாவது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தியும் சான்றிதழும் கிடைத்துள்ளது. "நான் 29ம் தேதி சென்னையில் இருந்தேன். இப்படி தவறாக சான்றிதழ் வழங்கினால் நான் எப்படி எனது இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வது?" என்று அப்ரோஸ் கேள்வி எழுப்புகிறார்.

மேலும் தஞ்சாவூரை சேர்ந்த 32 வயது செல்வி ஜூலை 30ம் தேதி முதல் டோஸ் செலுத்தியுள்ளார். அவர் இர்ண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளாத நிலையில், அவர் நவம்பர் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம் தளிக்கோட்டையில் செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் கிடைத்துள்ளது. "சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஊருக்கு நான் சென்றது கூட இல்லை. இப்போது நான் எப்படி எனது இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வது என கேட்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்டபோது, ‘6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறாக அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் இருக்கலாம்" என்றார். இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ’செல்போன் எண்ணை தவறாக பதிவிடுவதால் இது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார். ஆனால் எப்படி சொந்த கிராமத்துக்கு அருகில் உள்ள பகுதிகளிலேயே இது போன்ற தவறுகள் நடைபெறுகின்றன என கேட்டதற்கு உரிய விளக்கம் தரப்படவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: