தாமிரபரணி : 125 ஆண்டுக்கால வருட பாலம் கம்பீரமாக இருக்கும்பட்சத்தில் புதிய பாலத்தில் ஓட்டை விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி

தாமிரபரணி  : 125  ஆண்டுக்கால வருட பாலம் கம்பீரமாக இருக்கும்பட்சத்தில் புதிய பாலத்தில் ஓட்டை விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி

பயன்பாட்டிற்கு வந்து சில வருடங்களிலேயே மீண்டும் மீண்டும் சேதமாகும் வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட நேரத்தில் துறைமுக இணைப்புச் சாலையாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரை 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 349.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டது.

திருநெல்வேலி தூத்துக்குடி செல்வதற்கான பாதையில் ஒரு பாலமும் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் வகையிலான தனித்தனி பாலங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டு நிறைவடைந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நெல்லை தூத்துக்குடி மார்கத்தில்  உள்ள ஒரு பாலத்தில் மத்தியில் காங்கிரிட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. இதனை அடுத்து அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மற்றொரு பாலம் வழியாக மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

ஆறுமாத காலத்தில் 3 கோடியே 14 லட்சம் செலவில் பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் 2020ஆம் ஆண்டு மற்றொரு பாலம் சேதமடைந்தது கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தப் பாலம் இன்னும் சீரமைக்கப்பட வில்லை. தற்போது ஒரு பாலத்தில் மட்டுமே அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பாலத்திலும் கான்கிரீட் பெயர்ந்து ஓட்டை விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் தினமும் நூற்றுக்கணக்கில் இந்த சாலையை பாலம் வழியாக கடக்கும் நிலையில் இந்த கான்கிரிட்டில் ஏற்பட்டுள்ள ஓட்டை பெரிதாகி பாலம் பெயர்ந்து விழுவதற்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனிக்கவேண்டும். கொரோனாவை காரணம் காட்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த பாலமே இன்னும் சீரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது .

 இந்த இரண்டு பாலங்களுக்கும் அருகில் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய ஒரு வழி பாலம் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பாலம் கட்டி நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது பாலம் அதன் ஸ்திரதன்மையை இழந்து விட்டது என்பதை காரணம் காட்டி பழைய பாலத்தை அகலப் படுத்தாமல் புதிதாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டது .

ஆனால் புதிதாக கட்டப்பட்ட இரண்டு பாலங்களும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், தமிழக அரசும் விழித்துக்கொண்டு உடனடியாக பாலத்தை சரிசெய்து பெரும் விபத்து நடப்பதை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

சிறந்த கதைகள்