கபசுரக் குடிநீருக்காக படையெடுக்கும் மக்கள்: சித்த மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்

கபசுரக் குடிநீருக்காக படையெடுக்கும் மக்கள்: சித்த மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரைப் பருக மக்கள் சித்த மருத்துவமனைகளுக்கு படையெடுத்தனர்.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க அலோபதி மருத்துவர்கள் ஒருபுறம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பாரம்பரிய சிகிச்சை முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் நோயை குணப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோயாளிகளுக்கு சித்த மருத்துவமனைகளில் 100 மில்லி அளவு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

இதனையறிந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏராளமானோர் கூடினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து கபசுர குடிநீரை பருகினர்.


சிறிது நேரத்தில் கபசுர குடிநீர் காலியானதால் ஏமாற்றமடைந்த மக்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு பகுதியில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கபசுர குடிநீர் மருந்தை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ பிரிவில் கபசுர குடிநீர் கசாயத்தை வாங்க யாரும் வரவில்லை. இதனால், அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் விஜயகோபாலபுரம் மற்றும் நாரணமங்கலம் கிராமங்களில் சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் தயாரிப்பதற்கான பவுடர் வழங்கப்பட்டது. இந்த கிராமங்களில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அண்மையில் தங்களது சொந்த ஊர் சென்று வந்ததால், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் கபசுர குடிநீர் வாங்கி பருகி வருகின்றனர்.  அதேநேரம் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கபசுர குடிநீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாதாரண மூலிகைகளால் தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை பருகுவதால் பக்கவிளைவுகள் வராது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளிநாடு, வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டவர்களுக்கு மட்டுமே கபசுர குடிநீரை பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Also see:
First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading