கோவில்பட்டி அருகே 7 ஆண்டுகளாக சர்வீஸ் சாலையின்றி சிரமப்படும் மக்கள் - குட்டித்தீவில் வசிப்பது போல உணர்வதாக வேதனை

கோவில்பட்டி அருகே 7 ஆண்டுகளாக சர்வீஸ் சாலையின்றி சிரமப்படும் மக்கள் - குட்டித்தீவில் வசிப்பது போல உணர்வதாக வேதனை

சாலை இல்லாமல் அவதிப்படும் மக்கள்

கோவில்பட்டி அருகே சர்வீஸ் சாலை இல்லாத காரணத்தால் கடும் சிரமத்தை சந்திப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியை தொடர்ந்து மிகவும் முக்கியமான நகரமாக இருப்பது கோவில்பட்டி. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் மட்டுமின்றி, இந்தியாவில் தீப்பெட்டி உற்பத்தியிலும், கடலை மிட்டாய் தயாரிப்பில் முக்கிய நகரமாக உள்ளது. கோவில்பட்டி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அப்போது சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முயற்சினால் 3 ரயில்வே மேம்பாலங்கள் பெற்று தந்தார்.

கோவில்பட்டி லெட்சுமி மில், ரெயில்வே நிலையம் ஆகிய இடங்களில் 2 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. மூன்றாவதாக அமைக்கப்பட இருந்த இளையரசனேந்தல் சாலை ரெயில்வே மேம்பாலம் சுரங்கபாலமாக மாற்றப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த 2014ம் ஆண்டு நிறைவு பெற்றன. ரெயில்வே சுரங்கபாலமாக மாற்றப்பட்டதால் பாலத்தின் இருபகுதிகளிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்பொழுது வரை சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. சர்வீஸ் சாலை இல்லாததால் கோபால்செட்டி தெரு, பிள்ளையார்கோவில் தெரு, கிருஷ்ண கோவில் தெரு, ஜமீன் பேட்டை தெரு, பெரியார் தெரு, மார்க்கெட் சாலை பகுதியில் வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதி வழியாக தான் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும், சர்வீஸ் சாலை இல்லாததால் இப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் சுரங்கபாலத்தின் அடியில் தேங்கிவிடுகிறது.

சாலையின்றி அவதிப்படும் மக்கள்


அது மட்டுமின்றி மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி விடுவதால், வாகனங்கள் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாத காரணத்தினால் ஒரு ஆட்டோ கூட போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக ஆபத்தான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுரங்கபாலம் வரும் வரை இப்பகுதி நகரின் முக்கிய பகுதியதாக இருந்தது. பாலம் அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதி குட்டி தீவு போன்று மாறிவிட்டது என்றும், மழை பெய்தால் பாலத்தின் வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் பலர் ரெயிலில் அடிப்பட்டு உயிர் இழந்துள்ளதாகவும், சர்வீஸ் சாலை அமைக்கப்படாத காரணத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், வாகனங்கள் உள்ளே வரமுடியவில்லை என்றும், சுரங்கபாலத்தின் வழியாக செல்லக்கூடிய பாதையில் சமூக விரோதிகள் மது அருந்துவதால் மக்கள் செல்ல முடியவில்லை என்றும், எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அப்பகுதியை சேர்ந்த பொன்னுமணி.


7 வருடங்களாக சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை, பல போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, ஒரு ஆட்டோ கூட வரமுடியாத நிலை இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை, கழிவு நீர் செல்ல வழியில்லை என்றும், மழைகாலங்களில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களையும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் கொண்டு செல்ல வேண்டிருப்பதாக கூறுகிறார் அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்ட போது, சர்வீஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். 7 ஆண்டுகாலமாக ஒரு குட்டி தீவாக மாறியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற 2 மேம்பாலங்களை போன்று இதையும் மேம்பாலமாக மாற்றி அமைத்து இருந்தால் இப்பகுதி மக்கள் இவ்வளவு சிரமம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனியும் தாமதம் செய்யமால் விரைந்து சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Sankar
First published: