ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை எய்ம்ஸ்: துவங்காத கட்டுமானம்... விற்றுத்தீர்ந்த ரியல் எஸ்டேட் பிளாட்கள் -  உண்மையில் எய்ம்ஸை சுற்றி நடப்பது என்ன?

மதுரை எய்ம்ஸ்: துவங்காத கட்டுமானம்... விற்றுத்தீர்ந்த ரியல் எஸ்டேட் பிளாட்கள் -  உண்மையில் எய்ம்ஸை சுற்றி நடப்பது என்ன?

எய்ம்ஸ் மருத்துவமனையின் சுற்றுச்சுவரும் அதனை சுற்றியுள்ள ரியல் எஸ்டேட் பிளாட்கள்

எய்ம்ஸ் மருத்துவமனையின் சுற்றுச்சுவரும் அதனை சுற்றியுள்ள ரியல் எஸ்டேட் பிளாட்கள்

2019 ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :

அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு செங்கல் கூட நகராமல் இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் ஏன் நடைபெறவே இல்லை என்ற கேள்வியை மக்கள் முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

2019 ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. வெறும் 12 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதன் மூலம் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் தருவதில் தாமதம் செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக அரசு எடுத்த எய்ம்ஸ் அஸ்திரம் செயலற்று இருக்கும் நிலையில், தற்போது 2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் அதே அஸ்திரத்தை எதிர்கட்சிகள் எடுத்துள்ளன.

மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நிதிகள் விரைவாக ஒதுக்கப்படுவதாகவும், அங்கு பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்,மதுரை இந்தியாவில் இருக்கிறதா, ஜப்பானில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,மற்ற மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு குறைவாக இருக்கும் காரணத்தால், அங்கு எய்ம்ஸ் பணிகள் விரைவாக நடப்பதாக தெரிவித்தார்.

எய்ம்ஸ் தொடர்பாக சுழன்று வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோப்பூருக்கு நேரில் சென்றோம். அங்கு, மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.சில கிலோ மீட்டர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் சுற்றுச் சுவர் மட்டும் நீண்டு கிடந்தன. இது ஒருபுறம் கவலையளித்த நிலையில், சுற்றுச்சுவர் முடியும் இடத்திலிருந்து பல நூறு ஏக்கருக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கற்கள் நட்டு பிளாட்கள் போட்டிருந்தது அதிர வைத்தது.

தோப்பூர் பகுதியை சேர்ந்த தங்கமாரி என்ற பெண் கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனை எங்கள் ஊரில் அமைய போகிறது என்றவுடன், மிகுந்த சந்தோஷத்தில் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இதுவரை மருத்துவமனை வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. காம்பவுண்டு சுவர் மட்டுமே உள்ளது. ஆனால், மருத்துவமனையின் பெயரை வைத்து பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பிளாட் போட்டு விற்றுத் தள்ளியுள்ளது மட்டும் தான் மிச்சம்" என வேதனையுடன் தெரிவித்தார்.

மதுரை மக்களிடம் கேட்டதற்கு,"எய்ம்ஸ் வந்திருந்தால் ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். தனியார் மருத்துவமனைகளில் பணத்தை வீணாக்காமல் தவிர்க்கலாம். ஆனால், தமிழ்நாட்டால் பலனில்லை என்று நினைத்து மத்திய பாஜக அரசு புறக்கணித்து விட்டதோ என தோன்றுகிறது" என்றும்,

"மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையை போல பாரபட்சத்துடனே நடத்தி வருகிறது. துவக்குவது போல துவக்கி விட்டு இப்போது கிடப்பில் போட்டு விட்டனர். தரமான மருத்துவம் கிடைப்பதில் எங்களுக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது" எனவும் கூறுகின்றனர்.

எய்ம்ஸ் தாமதம் ஆவதற்கான உண்மையான காரணம் என்ன? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பன குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கேட்டோம், அதற்கு பதிலளித்த அவர், "2019 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அவசர அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது. ஒரு அடி கூட மத்திய அரசு தரப்பிலிருந்து முன்னெடுத்து வைக்கவில்லை. தமிழக அரசின் வசம் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய சுகாதாரத் துறைக்கு பெயர் மாற்றி கொடுப்பதற்காக தமிழக அரசும் மதுரையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இரண்டு வருடங்கள் ஆக்கியுள்ளார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு சார்பில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். தெலுங்கானா, ஆந்திரா, ஜம்மு மாநிலங்கள் இதுபோல அதிகாரி நியமித்துள்ள நிலையில் தமிழகம் இதுவரைக்கும் நியமிக்கவில்லை. அப்படி நியமித்தால் மட்டுமே மத்திய அரசுடன் விவாதித்து மருத்துவமனைக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

தமிழக எய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்தவரைக்கும், தமிழகத்தில் யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை என்பதுதான் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழக எய்ம்ஸ் உடன் சேர்த்து மற்ற மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ மனைகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை செய்வதற்கு 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியும் தற்காலிகமாக மாநில அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த வசதியை மாநில அரசு செய்து கொடுத்தால் மத்திய அரசு உடனடியாக அதற்கான பணிகளை துவங்கி விடும்" என்றார்.

Also read... கூட்டணி குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடப்படும் என நம்புகிறோம் - காங்கிரஸ்!

"மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் வாங்குகிறது. ஆனால் மற்ற மாநில மருத்துவமனைகளுக்கு வாங்கவில்லை. அதிலும், முதலில் 1264 கோடி ரூபாய் இறுதி செய்த நிலையில், தற்போது அதனுடைய மதிப்பு 2000 கோடி ரூபாயாக மாறி இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த இரண்டாயிரம் கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேநேரம்,இந்த கூடுதல் தொகை எதற்காக ஒதுக்கப்பட்டதை என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கும்போது எய்ம்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.மாநில அரசு தொடர்ச்சியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.எட்டு வழி சாலை அமைப்பதில் தமிழக அரசிற்கு இருந்த ஆர்வம், எய்ம்ஸ் விவகாரத்தில் ஏன் இல்லை.சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கூட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aiims Madurai, Madurai