Home /News /tamil-nadu /

'பென்னி குயிக் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார் வெண்ணிலா' : விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விமர்சனம்

'பென்னி குயிக் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார் வெண்ணிலா' : விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விமர்சனம்

எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர், வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. - அன்வர் பாலசிங்கம்

எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர், வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. - அன்வர் பாலசிங்கம்

எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர், வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. - அன்வர் பாலசிங்கம்

    தனது சொத்தை முழுமையாக விற்று கர்னல் பென்னி குயிக் முல்லை பெரியாறு அணையை கட்டவில்லை என்று, கவிஞர் வெண்ணிலா விளக்கம் அளித்திருந்தார். அவரது முகநூல் பதிவு வைரலான நிலையில், வெண்ணிலா தவறான தகவலை பரப்புவதாக விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விமர்சித்துள்ளார்.

    முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணை திட்டத்திற்கு, தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்துள்ளார் என்று கூறியிருந்தார்.

    இதற்கு மறுப்பு வெளியிட்ட கவிஞர் வெண்ணிலா, பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    மேலும் அவர் தனது பதிவில், மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன். ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது. பென்னியின் உண்மையான தியாகங்களுக்கு அணையின் உயரமான 176 அடி உயரத்திற்கே சிலை வைக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவு நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பென்னி குயிக் தொடர்பாக வெண்ணிலா தவறான தகவல்களை பரப்புகிறார் என்று ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது-

    இங்கிலாந்தில் உள்ள தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று இங்கு கொண்டு வந்து அணையை கட்டினார் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்கிற வெண்ணிலாவின் கருத்தை ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பிலும், 10 லட்சம் விவசாயிகளின் சார்பிலும் நிராகரிக்கிறோம்.

    அதற்கு அவர் மேற்கோளாகக் காட்டி இருக்கும் ஒரு புத்தகம் உதவி பொறியாளராக இருந்த மெக்கன்சி எழுதிய history of the periyar project ஆகும். இந்தப் புத்தகத்தில் பொறியாளர் மெக்கன்சி அவர்களால், பெரியாறு அணை கட்டுமானம் குறித்த முழு வரவு செலவும் எழுதப்பட்டிருப்பதாக தரவுகளை முன்வைக்கிறார்.

    Also Read : சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குயிக்? முதல்வர் ஸ்டாலின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் கவிஞர் வெண்ணிலா

    கட்டுமான பணிகளுக்கான செலவு என்பது கட்டுமானம் மட்டுமே சார்ந்தது என்பதை கவிஞர் வெண்ணிலா கவனமாக மறந்துவிட்டார். கடும் நெருக்கடியில் ஒரு முறைக்கு பலமுறை அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பின்பும், தனது விடாமுயற்சியை கைவிடாமல் அந்த மாமனிதர் செய்த தியாகம் என்பது வரவு செலவில் அடங்காது.

    நிலைமை கை மீறும் போதெல்லாம் கட்டுமான பணியாளர்கள் காட்டு வழியாக தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தான் மேற்கொண்ட கட்டுமானம் தோற்று விடக் கூடாது என்பதற்காக,புதியவர்களை அழைத்து வரக்கூடிய பொறுப்பு என்பது அவ்வளவு சாதாரண பொறுப்பு அல்ல.

    எங்கோ காட்டுக்குள் நடக்கும் ஒரு கட்டுமான பணிக்கு வரக்கூடிய ஒரு பணியாளர், வெறுமனே வந்து விட மாட்டார் என்பது வெண்ணிலா போன்ற களத்தில் நிற்காதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    அந்தப் பணியாளருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும், அவர்களை அழைத்து வருகிறவர்களுக்கு செலவுக்கு பணம் வேண்டும், இதற்கெல்லாம் மேலாக அன்றைக்கு இருந்த ஊர் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு பணியாளரை அந்த ஊரிலிருந்து அழைத்து வர வேண்டுமானால் அந்த ஊரைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு (நாட்டாமை, அம்பலம்) பணம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் மெக்கன்சி எழுதிய நூலில் கண்டிப்பாக எழுதப்பட்டு இருக்காது என்பதை கவிஞர் வெண்ணிலா உணரவேண்டும்.

    கட்டுப்பாடு மிகுந்த, பிரிட்டிஷ் இந்திய கவர்னர், இந்த செலவுகளை ஏற்றிருப்பாரா என்பதையும் வரலாற்று கண்ணோட்டத்தோடு உணர வேண்டும் நாம்.

    இதையும் படிங்க : Penny cuick: ஆங்கிலேய பொறியாளரை தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடும் தேனி மக்கள்

    இதைத்தாண்டி கட்டுமானப் பணியில் அகால மரணமடைந்த தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டை மெக்கன்சி அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை என்பது கவிஞர் வெண்ணிலா விற்கு தெரியுமா...?

    இழப்பீட்டை முறையாக கொடுக்காமல், புதிய தொழிலாளர்களை அழைத்து வந்திருக்க முடியுமா...?

    இந்த இழப்பீட்டை எந்தக் கணக்கில் எழுதுவது...?

    இதையெல்லாம் தாண்டி நடைமுறைச் செலவுகள் என்றொன்று இருக்கிறது.

    வரலாற்று ஆவணங்கள் எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் எழுதுவது வரலாறாக இருக்காது.

    Also Read :

    தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



    பெரியாறு அணை குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமானால், வெறும் புத்தகங்கள் மட்டும் போதாது, நடைமுறை அனுபவங்களும் வேண்டும்.

    பிரிட்டிஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி குயிக் கால் அணை கட்டி இருக்க முடியுமா என்கிற அவரது கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று...

    பிரிட்டிஷ் இந்திய கவர்னர் கட்டுமான பணியின் போது களத்தில் இருந்தவர் அல்ல... அவர் ஒரு நிர்வாகி அவ்வளவே.

    அவருக்கு பிடித்ததெல்லாம் மாமனிதர் கர்னல் பென்னிகுவிக்கிடமிருந்த, அவரது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தான். அதையும் கேள்விக்குள்ளாக்குகிறது கவிஞர் வெண்ணிலாவின் முறையற்ற கேள்விகள்.

    ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு அறிக்கை கொடுக்கிறார் என்றால், அது எத்தனை விசாரணைகளுக்குப் பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை கவிஞர் வெண்ணிலாவின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

    மேலாக சாமானியர்களிடம் புழங்கும் கதைகளையெல்லாம், முதல்வர் அறிக்கையாக வழங்கக் கூடாது என்கிற வெண்ணிலாவின் கருத்தில் புதைந்து கிடக்கிறது,,, தான் ஒரு மேதாவி என்கிற அதிகாரத்தனம்.

    இதையெல்லாம் விட சின்னதாக ஒரு கேள்வியை கவிஞர் வெண்ணிலாவுக்கு முன்வைக்கிறேன்...

    ஐந்து பெண் மகள்களைப் பெற்ற மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் அவர்கள் இறக்கும் போது அவரது மூத்த மகளுக்கு வயது 30. அதற்குப் பின்னால் வரிசையாக நான்கு பெண்கள் ஒரு ஆண்மகன்.

    இதில் 3 பெண் மக்களுக்கு மணம் ஆகவில்லை என்கிற செய்தி குறித்து ஏதாவது தெரியுமா கவிஞர் வெண்ணிலாவிற்கு.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே நாம் இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை காதல் சுதந்திரங்களையும் பெற்றுவிட்ட பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில், மாமனிதரின் மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகவில்லை என்கிற செய்தியை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

    ஒரு அரசை கேள்வி கேட்கும் அளவிற்கு சென்றுவிட்ட நீங்கள், பிரிட்டனுக்குச் சென்று அவருடைய கடைசி காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையை, அவரது குடும்பத்தின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு சரிபார்ப்பு செய்து முதல்வருக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டுமே தவிர,

    கேவலம் மெக்கன்சி என்கிற ஒரு பொறியாளர் எழுதிய புத்தகத்தை முன்வைத்து மட்டுமே கேள்வி எழுப்பி இருப்பது என்பது, எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கொடிய மனோபாவம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

    கேம்பர்லியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு செல்லுங்கள். வரலாற்றை தேடுங்கள். புத்தகங்களை முன்நிறுத்தி வரலாறு படைக்க முயலாதீர்கள். கள ஆய்வு செய்யுங்கள். அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

    மேலாக ஒரு கட்டுமானப் பணி என்பது வெறும் செங்கல் சிமென்ட் கம்பி கொத்தனார் மட்டுமே சார்ந்தது அல்ல. அதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாமல் மொத்த க்கட்டுமானச் செலவில், கால்வாசி அளவுக்கு வரும் வகையில் மற்ற செலவுகளும் உள்ளீடாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Mullai Periyar

    அடுத்த செய்தி