சென்னை: பள்ளி சிறுமிகளிடம் ஆபாச உரையாடல் - சிக்கிய மதபோதகர்கள்

Youtube Video

சென்னையில் கிறி்ஸ்தவ மத அமைப்பில் பணியாற்றிய மதபோதகர்கள், பள்ளிச் சிறுமியரிடம் சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக உரையாடியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  சென்னை அயனாவரத்தில் ’ஸ்கிரிப்ச்சர் யூனியன் அண்டு சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில், கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

  இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மதம் தொடர்பான போதனைகள் மற்றும் சிறப்பு வகுப்புகளை இந்த மதபோதகர்கள் நடத்தி வருகின்றனர். மிஷனின் ஆங்கில மொழிப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுார் பகுதியில் பணியாற்றி வந்தார்.

  இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், வேலுாரில் அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண், சாமுவேல் குறித்து தலைமையகத்திற்குப் புகாரளித்துள்ளார். அதில், தனது முகநுால் மெசஞ்சரில் சாமுவேல் ஜெய்சுந்தர் ஆபாசமாக உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சாமுவேலிடம் மிஷன் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அதில் ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரும் இதேபோல் பள்ளிச் சிறுமியரிடம் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது.

  2 மாதங்கள் கழிந்த நிலையில், எழுத்தாளர் நிவேதிதா லுாயிஸ் மற்றும் ஜோயல் கிப்ட்சன் ஆகியோர் தங்கள் முகநுால் பக்கத்தில், இந்த மதபோதகர்களின் ஆபாச உரையாடல்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டிருந்தனர். 15 வயதுக்கு கீழே உள்ள பள்ளி மாணவியருக்கு ஒழுக்க வகுப்பு நடத்தும் மதபோதகர்கள் இப்படி செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

  பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை மீ டூ இயக்கம் மூலம் அம்பலப்படுத்திய பாடகி சின்மயியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ஸ்க்ரிப்ச்சர் மிஷன், உடனடியாக சாமுவேல் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டது.


  மேலும், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் ஒரு புகாரையும் அந்த மிஷன் அனுப்பியுள்ளது. மிஷன் ரீதியிலான விசாரணை முடிந்தபின், உரிய ஆதாரங்களுடன் காவல்துறையிடம் விரிவான புகாரளிக்கவும் மிஷன் கமிட்டி தெரிவித்துள்ளது.
  Published by:Rizwan
  First published: