200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக்கூடிய பயணிகள் ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி தெற்கு ரயில்வேயில் 34 ரயில்களை அதன் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து, புதிய பயண அட்டவணை தயார் செய்யுமாறு தெற்கு ரயில்வே உட்பட நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களையும் ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வேகளில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை விரைவு வண்டிகளாக மாற்றி ஜுன் 19ம் தேதிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வேக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 30 ரயில்களும், கேரளத்தின் 4 ரயில்களும் அடங்கும்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் கூறுகையில், “விரைவு வண்டிகளாக மாற்றப்படுவதால் பல ஊர்களில் ரயில்கள் நிற்காது. இதன் மூலம் நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிற்றூர்கள் பெரும் பாதிப்பினை சந்திக்கும். வணிகத்துக்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், கட்டணம் இரு மடங்கு அதிகப்படுத்தப்படும்.
ஒவ்வொரு பயணிகள் ரயிலும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பல போராட்டங்களை நடத்தி பெறப்பட்டதாகும். அவை அனைத்தையும் ஒரே உத்தரவில் கிழித்தெறியும் ரயில்வே வாரியத்தின் உத்தரவு கண்டனத்துக்கு உரியது. இந்த உத்தரவினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.” என்றார்.
முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சரும், பா.ம.க துணைப் பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி கூறுகையில், ”இது ஏழை மக்களுக்கான அறிவிப்பாக தெரியவில்லை. 200 கிலோ மீட்டருக்கு சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் ஒரு பயணிகள் ரயில் அல்லது மின்சார ரயில்களை இயக்கி விட்டு, பின்னர் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் செல்லக்கூடிய பயணிகளை ரயிலை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றிக்கொள்ளட்டும். சில ரயில் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்,” என்றார்.
இதுகுறித்து, சென்னை கோட்ட இரயில் பயணிகள் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் கூறுகையில்,”பெரிய நகரங்களில் இருந்து உத்தரவு பிறப்பிப்பது வேறு. இந்த உத்தரவால் சின்ன ஊர்களில் இது படிக்கவும், வேலைக்கும் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டால், சில ரயில் நிறுத்தங்களில் நிற்காது.
உதாரணமாக யேஸ்வந்த்பூரில் இருந்து சேலத்தில் வரும் பயணிகள் 6 மணிக்கு ஓசூர் வரும். ஓசூரில் வேலை பார்க்கும் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்ப அந்த ரயிலை தான் அதிகம் நம்பி உள்ளனர். சின்ன ஊர், கிராமங்களில் இருந்து ரயிலில் பயணிப்பவர்கள் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்,” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Southern railway