சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் மீண்டும் பார்க்கிங் பகுதியை திறக்க பயணிகள் கோரிக்கை

சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் மீண்டும் பார்க்கிங் பகுதியை திறக்க பயணிகள் கோரிக்கை

மூடப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி

குறிப்பாக, வெளியூருக்கு செல்பவர்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மூடப்பட்டுள்ள வாகன பார்க்கிங் பகுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

ஆனால், இரண்டு ரயில் நிலையங்களிலும் உள்ள வாகன பார்க்கிங் பகுதி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதிக்கான டெண்டர் புதுப்பிக்கப்படாததால், தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, வெளியூருக்கு செல்பவர்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் கூடுதல் கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக இரண்டு நாட்களுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளொன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்தங்களை புதுப்பித்து விரைவில், வாகன பார்க்கிங் பகுதியை திறக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Vijay R
First published: