Home /News /tamil-nadu /

நாங்கள் விலை போகவும் மாட்டோம், குதிரை பேரத்தில் ஈடுபடவும் மாட்டோம் : கமல்ஹாசன்

நாங்கள் விலை போகவும் மாட்டோம், குதிரை பேரத்தில் ஈடுபடவும் மாட்டோம் : கமல்ஹாசன்

கமல்ஹாசன் ஏஎன்ஐ-க்கு பேட்டி

கமல்ஹாசன் ஏஎன்ஐ-க்கு பேட்டி

காங்கிரஸ் மற்றும் பாஜகவை பிரித்து பார்க்க முடியாது. இரு கட்சிகளும் நாட்டிற்கு பெரிய தவறிழைத்துள்ளது என்றும் கூறினார்.

  • News18
  • Last Updated :
    வரும் மக்களவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தில் உள்ள தலைவர்கள், யாரும் விலை போகவோ அல்லது குதிரை பேரத்திலோ ஈடுபட மாட்டார்கள் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”தராசில் உள்ள முள் தான் மக்கள் நீதி மய்யம். நாங்கள் யாரும் விலைபோக மாட்டோம். நாங்கள் குதிரை பேரத்திலும் ஈடுபட மாட்டோம். எங்களை விலைக்கு வாங்குவது மிகவும் கடினமான ஒன்று. பணத்தைக் கொடுத்து நிச்சயம் எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரையும் விலைக்கு வாங்குவது மிகமிகக் கடினம்.

    எங்கள் நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டும் தான். இந்தத் தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாக இருந்தாலும், எனது நோக்கம் தமிழக மக்களின் நலன் சார்ந்தே இருக்கும். யார் பிரதமராக வந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற இங்குள்ளவர்கள் மட்டும் தான் போராடவேண்டும்.

    காங்கிரஸ் மற்றும் பாஜகவை பிரித்துப் பார்க்க முடியாது. இரு கட்சிகளும் நாட்டிற்கு பெரிய தவறிழைத்துள்ளன.’’

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிப்பது குறித்து பல கட்சிகளும் வாக்குறுதிகளை தருகிறார்களே என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “சட்டத்திற்கு ஓர் இடமும் கருணைக்கு ஓர் இடமும் உள்ளது. எனக்குத் தெரிந்தவரை சட்டத்திற்கான இடம் இந்த வழக்கில் நிறைவடைந்துவிட்டது. இப்போது கருணைக்கான இடம் தேவை. அது நம்மிடம் இருந்தால், நிச்சயம் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக வெளியான 21 வேட்பாளர்களின் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை.

    Also See...

    Published by:Mari S
    First published:

    Tags: Election 2019, Kamal hassan, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி