2019 நாடாளுமன்ற தேர்தலை பாஜக உடன் கைகோர்த்து அதிமுக களம் கண்டது. இந்த கூட்டணி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றிக்கண்டது- இதையடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிட்டன. இருந்த போதும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக இரு கட்சியின் தலைவர்களும் தெரிவித்தனர்.
ஆனால், இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே அரசியல் களத்திலும், கருத்திலும் பல்வேறு வேறுபாடுகள் தென்பட தொடங்கின. இதற்கு இடையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதில், பெரும்பான்மையான நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள் ஈபிஎஸ் பக்கம் நிற்க, ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார்.
இப்படியான ஒரு சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடருவது குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த மாத இறுதிக்குள், தங்களது முடிவை தெரிவிக்க, பாஜக மேலிடம் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்று அழைப்பிதழுடன் ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதே நேரத்தில் அமித்ஷா சென்னை வந்த போது அவரை ஈபிஎஸ் சந்திக்கவில்லை. வாரணாசி காசி தமிழ் சங்க விழாவுக்கு அழைப் பு விடுக்கப்பட்டும் புறக்கணித்தார். அத்துடன், குஜராத்தில் பாஜகவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தும் செல்லவில்லை. அடுத்தடுத்து, மூன்று நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் நெய்வேலியில் நடத்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.
சி.வி.சண்முகம் பேச்சு குறித்து பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு கட்சியின் கூட்டணி விவகாரம் தொடர்பாக, அந்த தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். எனவே, சி.வி.சண்முகம் பாஜகவில் இணைந்து விட்டாரா என தனக்கு தெரியவில்லை என்று பதிலடி கொடுத்தார்.
ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவும் பாஜகவும் மாறி மாறி கடுமையாக விமர்சிப்பதால், கூட்டணி முறிவதாக கூற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் கூட நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசை , அதிமுக எம்.பி., தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்ததை குறிப்பிட்டார். இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்ற, அதிமுக உறுதுணையாக இருந்ததை சுட்டிக்காட்டினார். எனவே, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.
கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது குறித்து பாஜக தலைமையும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் தான் வெளிப்படையாக பதில் சொல்ல முடியும். அதேவேளையில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணி குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK Alliance, Annamalai, BJP, CV Shanmugam, DMK