• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கும் திமுக.. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி?

கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கும் திமுக.. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி?

அண்ணா அறிவாலையம்

அண்ணா அறிவாலையம்

திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கட்சி பிரமுகர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தொகுதி பங்கீட்டில் அதிருப்தி காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெற இருக்கிறது.

  • Share this:
    திமுக தனது கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. அதிகப்படியான தொகுதியில் போட்டியிட விரும்பும் திமுக, கூட்டணி கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கவே முனைப்பு காட்டி வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணியில் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் 30 தொகுதிகள் வரையிலும், விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை இலக்கத்திலும் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன.

    ஆனால், காங்கிரசுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரையிலும், மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமையான இன்று காலையில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனான இந்த ஆலோசனையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். இதனிடையே தொகுதி பங்கீட்டில் அதிருப்தி காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

    அப்போது திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்றுக் கொள்வதா என்பது குறித்தும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை 30 சதவீதம் உயர்வு..

    அப்போது அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இது வழக்கமான கூட்டம்தான் என அக்கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: