தமிழக தலித் இளைஞர் புனேவில் சந்தேக மரணம்: ஆணவக் கொலை என பெற்றோர்கள் புகார்

சுப்பிரமணியபுரத்தில் காட்டப்பட்டது போன்று, பெண் மூலமாக பேசி, பரந்தாமனை புனே வரவழைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரந்தாமனின் நண்பர்கள் கூறுகின்றனர்.

Vaijayanthi S | news18
Updated: January 10, 2019, 12:42 PM IST
தமிழக தலித் இளைஞர் புனேவில் சந்தேக மரணம்: ஆணவக் கொலை என பெற்றோர்கள் புகார்
சிவானி மற்றும் பரந்தாமன்
Vaijayanthi S | news18
Updated: January 10, 2019, 12:42 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரது உடலைத் தமிழகம் கொண்டுவர அரசு உதவி செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாபதியின் மகன் பரந்தாமன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள முத்தையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் சிவானியும், பரந்தாமனும் காதலித்து வந்துள்ளனர். சிவானி குடும்பத்துடன் புனேவில் வசித்து வருகிறார். இவர் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

பரந்தாமன் வேலை தொடர்பாக ரயிலில் புனே செல்லும்போது, அதே ரயிலில் சென்ற சிவானியைச் சந்தித்துள்ளார். அதன்பிறகு அவர்கள் தங்கள் காதலைத் தொடர்ந்துள்ளனர். சிவானியின் குடும்பத்திற்கு காதல் விவரம் தெரிந்ததும் சிவானியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பரந்தாமனும், சிவானியும் தமிழகம் வந்து ஊத்துக்கோட்டை கோவிலில் திருமணம் செய்துகொண்டு சார்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தை பதிவும் செய்துள்ளனர்.

இதற்கிடையில், பெண்ணின் தரப்பினர் தனது மகளைப் பரந்தாமன் கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தனது மகள் 18 வயது பூர்த்தியடையாதவர் என்றும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை காவல்துறையினர் காதல் தம்பதியினரைத் தேடிஅலைந்தனர். மேலும் பரந்தாமனின் தந்தை, நண்பர்கள் உள்ளிட்ட உறவினர்களைக் கைதுசெய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.
Loading...
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதியினர், தாங்கள் இருவரும் மேஜர் என்று தெரிவித்தனர். ஆனால், பெண்ணின் தரப்பினர் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று பள்ளிக்கூட சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த ஆவணங்கள் போலியானவை என்றும், தான் இதுவரை பள்ளிக்கூடமே சென்றதில்லை, கணவருடன் செல்ல விரும்புவதாகவும் சிவானி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையில் 18 வயது பூர்த்தியடைந்திருப்பது தெரிய வந்தது. ஆயினும், வயது குறித்த ஆவணங்கள் சரியில்லாததால் நீதிமன்றம் அந்தப் பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டது.

மேலும், வயது குறித்த மருத்துவப் பரிசோதனைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவப் பரிசோதனையில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகத்துடன் அறிக்கைக் கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். இதனைத் தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் பரந்தாமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

69 நாட்கள் சிறையில் இருந்த பரந்தாமன் கடந்த டிசம்பர் 25-ம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன்படி 28-ம் தேதி முதல் தினமும் காலை உசிலம்பட்டி அருகில் சிந்துபட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.

இதற்கிடையில் 4-ஆம் தேதி காலை மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் ராஜ்கோட்நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குமாட்டியவாறு பரந்தாமன் இறந்துகிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தூக்கில் தொங்கியபடி பரந்தாமன்தரையில் கால் பதியுமாறு நின்ற நிலையில் உடல் இருந்துள்ளது. இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. விசாரித்ததில் 2-ம் தேதி சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் பரந்தாமன் கையெழுத்திட்டுள்ளார். 3-ம் தேதி கையெழுத்திடவில்லை. 4-ம் தேதி இறந்த நிலையில் உடல் புனேவில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்து பரந்தாமனின் பெற்றோர் மற்றும் உறவினர் பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதியக்கோரி புகார் அளித்துள்ளனர். போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்துள்ளனர்.

பரந்தாமன் தன் கைப்பட பல பக்கம் கடிதம் எழுதி நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், சிவானியின் தந்தை மற்றும் உறவினர்களால் தான் எவ்வாறு மிரட்டலுக்கு ஆளானார் என்பதை விரிவாக எழுதியுள்ளார். காவல்துறை, சிவானியின் பெற்றோருக்கு உதவியாக இருந்ததையும், தன்னையும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் அடித்து சித்திரவதை செய்ததையும் எழுதியுள்ளார்.

மேலும், மாகாராஷ்டிரா போலீசார் பரந்தாமனின் உடலை உடனடியாக வாங்கிச் செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். ஏழை, எளிய தலித் குடும்பத்தைச் சேர்ந்த சபாபதி மற்றும் உறவினர்கள் உடலை புனேவில் இருந்து இங்கு கொண்டு வர வசதியின்றி உள்ளனர்.

உடலை கொண்டுவர அரசு உதவிசெய்யவேண்டுமென்று நேற்று 7-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் சபாபதி மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மகன் மரணம் தற்கொலை என நம்பமுடியாமல், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் கூறுகினனர்.

சுப்பிரமணியபுரத்தில் காட்டப்பட்டது போன்று, பெண் மூலமாக பேசி, பரந்தாமனை புனே வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என பரந்தாமனின் நண்பர்கள் கூறுகின்றனர்.

சாதி மீறி திருமணம் செய்துகொண்ட மகன் இறந்த நிலையில் அது கொலையா? தற்கொலையா? எனத் தெரியாமல், உடலையும் எடுத்துவர முடியாமல் எந்தவொரு உதவியும் இன்றி பரந்தாமனின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களை சந்தித்து இறந்த பரந்தாமனின் குடும்பத்தினர் உறவினர்கள் தன் மகனின் உடலை அரசு செலவில் கொண்டு வர வேண்டும். மகனின் இறப்புக்கு காரணமான சிவானியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். மேலும், 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைவைத்தனர்.

Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...