சேலத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த மகளின் கருவைக் கட்டாயப்படுத்தி கலைத்த பெற்றோர் கைது

சேலத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த மகளின் கருவைக் கட்டாயப்படுத்தி கலைத்த பெற்றோர் கைது

கைது செய்யப்பட்ட பெற்றோர்கள்

சேலத்தில் காதல் திருமணம் செய்த மகளைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியின் மகள் ரேணுகாதேவி. இவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஜூலை மாதம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் போன் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் .

  இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் ஆகஸ்ட் மாதம் இருவரும் திருப்பூருக்கு சென்று கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால் மாணவி அவர் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார் .

  இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மகள் ரேணுகாதேவி அவரது கணவர் கணேசனை சிறுவாச்சூர் அழைத்து வந்த பெற்றோர் சில நாளில் ஜாதகம் சரியில்லை என இருவரையும் பிரித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கணேசன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் இருவரையும் மீட்டு சென்று ராமநாதபுரத்தில் விட்டு வந்தனர் .

  இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தந்தை சுப்பிரமணிக்கு உடல்நிலை சரியில்லையென தாய் செல்வி, மகள் ரேணுகாதேவியிடம் கூறியுள்ளார். அவர் கடந்த 21 - ம் தேதி கணவரிடம் சொல்லாமல் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த ரேணுகா தேவியை ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

  இந்த தகவலை தனது கணவரிடம் தெரிவித்ததோடு, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிகர் அவர்களிடம் ரேனுகாதேவி புகார் கூறியுள்ளார். புகாரின் பேரில் ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான போலீஸார் ரேணுகா தேவியை மீட்டு ஓமலூர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தந்தை சுப்ரமணி, தாய் செல்வி ஆகியோரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: