• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வர் வாதப்படி பார்த்தால் ஜனவரி 14ம் தேதிதான் தமிழ்நாடு நாள்: ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் வாதப்படி பார்த்தால் ஜனவரி 14ம் தேதிதான் தமிழ்நாடு நாள்: ஓ.பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டாலும், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1968-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 14-01-1969 முதல்தான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது.

  • Share this:

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாதத்தின்படி பார்த்தால் ஜனவரி 14ம் தேதியைதான்  தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


    மொழிவாரியாக 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம்தான் தற்போதைய தமிழ்நாடு. எனவேதான், அப்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் ஒன்றாம் தேதி தோன்றியதன் அடிப்படையில், நவம்பர் ஒன்றாம் நாளை 'தமிழ்நாடு நாளாக' அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது.


    இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப்போவதாக  முதலமைச்சர்  அறிவித்து இருக்கிறார். மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி, 1967 ஜூலை 18 -ம் தேதி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 'தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட நாள்தான் பொருத்தமாக இருக்கும்' என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்து, அதன் அடிப்படையில், ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.



    .ஆனால் இது பொருத்தமற்ற ஒன்றாகும். ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டாலும், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1968-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 14-01-1969 முதல்தான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. முதலமைச்சர் வாதத்தின்படி பார்த்தாலும் 14-01-1969 ஆம் நாளைத் தான் 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட வேண்டும். ஒரு குழந்தை என்றைக்கு பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்படுமே தவிர, ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தையின் பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள முடியாது.

     


    ஒரு அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருத முடியாது. எனவே, 'ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள்' என்ற முதலமைச்சர் அறிவிப்பு வாதத்தின்படியே நியாயமற்றதாக இருக்கிறது.




    ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. பத்து வருடங்கள் கழித்து அந்தக் குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அந்தக் குழந்தையின் பிறந்த நாள் என்பது அந்தக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில்தான் கொண்டாடப்படுமே தவிர, பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்படமாட்டாது.


    இதேபோன்று, தற்போதைய நிலப்பரப்புடன் 1956-ம் ஆண்டு பிறந்த சென்னை மாகாணம் என்ற குழந்தைக்கு 1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்து அதன் அடிப்படையில் 1969-ம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டாலும், அதன் பிறந்த நாள் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதிதான். எனவே ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது. இந்தச் செயல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன் பிறந்த மாநிலத்தை பின் பிறந்ததாக கூறுவதற்குச் சமம். இது வரலாற்றை திரித்து எழுதும் முயற்சி. 1956-ம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967-ம் ஆண்டு பிறந்ததாக சித்தரிப்பது மரபு மீறிய செயல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.


    எனவே, சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் ஒன்றாம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாக கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 18-ம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பினை திரும்பப் பெற்று, நவம்பர் ஒன்றாம் தேதியே 'தமிழ்நாடு நாள்' என்று தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: