அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்குநிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசார விவாதம் நடைபெற்றது. இருப்பினும், யார் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்படவில்லை. ஆனால், அன்றைய தினமே அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். நாளை அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, அவரது வீட்டுக்குச் சென்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று முன்னாள் அமைச்சரும் பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி, அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், கே.சி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.