ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் உட்பட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கிராமப்புறங்களில் செயல்படுத்தும் அதிகாரங்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடமிருந்து பறிக்கப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 61 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவி ஏற்று, 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் திட்டப்பணிகள், அதற்கான நிதி முறையாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை என்றும், கிராமத்தில் செய்து முடிக்கப்பட்ட அடிப்படை வசதிக்கான பணிகளுக்கு நிதியை உடனே ஊராட்சி மன்றத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமியிடம் மனு வழங்கினர். மேலும், தங்கள் கோரிக்கையை உடனே ஏற்று, திட்ட பணி ஆணைகளை வழங்க வலியுறுத்தினர். இல்லாவிட்டால், அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ஒருகட்டத்தில், ஊராட்சி தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு, அவரது அலுவலகத்திலேயே போராட்டத்தை தொடங்கினர்.
தலைவர்களுக்கான அதிகாரம் பறிப்பு:
அரசு அலுவலர்களே முடிவு செய்து, திட்ட பணி ஆணைகளை அரசியல் கட்சிகள் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகளாகிய ஒன்றிய குழு தலைவர், மாவட்ட குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் மேஜைக்கு செல்வதாகவும், குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கே மொத்தமாக கொடுப்பதாகவும், இதனால், ஊராட்சி தலைவர்கள் பார்வைக்கு வர வேண்டிய பணிகள் முறையாக நேரடியாக வருவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். சில நேரங்களில் ஊராட்சி திட்டப்பணிகளை பணம் செலுத்தி வாங்கி வர வேண்டிய மோசமான சூழல் உருவாகியுள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் புலம்புகின்றனர்.
மேலும், ஆளுங்கட்சிக்கு சார்பாக செயல்படுவதாக எண்ணி அரசு அலுவலர்கள், கட்சி சார்பற்ற தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம், அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை பறிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒன்றிய கவுன்சிலர், சேர்மேன், மாவட்ட கவுன்சிலர் , சேர்மேன் ஆகியோருக்கு ஷேர் போன பிறகுதான் கிள்ளுக்கீரையாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திட்டங்களை ஒதுக்குவதாகவும், கிராம ஊராட்சி தலைவர்களை அரசு அலுவலர்கள் இளக்காரமாக நடத்துவதாகவும் புலம்புகின்றனர். இதனால், கிராம தேவைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்ய சொந்த பணத்தில் சில வேலைகளை எடுத்து செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நகரப்போவதில்லை என வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்குள் அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
Must Read : புத்தாண்டு கொண்டாட்டம் : தடை, கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை காவல்துறை அறிவிப்பு
இதையடுத்து, போராட்டம் குறித்து கேள்விப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், போராட்டம் நடந்த இடத்துக்கே வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர்களின் புகார்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.