வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்த பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குவங்கி அரசியலுக்காக அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலமாக முந்தைய பழனிசாமி அரசு கொண்டுவந்து, தற்போதைய ஸ்டாலின் அரசும் ஆராயாமல் செயல்படுத்திய 10.5% உள் இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
இந்த இருவரின் சுயநலத்தாலும், கபட நாடகத்தாலும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி கல்லூரிகளில் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவச்செல்வங்கள் மட்டுமல்ல; திடீர் இட ஒதுக்கீட்டால் இடம் கிடைக்காமல் போன 148 பிரிவிலுள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதுதான் கண்ட பலன். இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் சேர்ந்தவர்களுக்கும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதே நிலைமைதான்.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பழனிசாமி அரசு அவசர,அவசரமாக இந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோதே எங்களுடைய பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள், “ எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காகதான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. 109 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவுக்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்
போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது” என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
டிடிவி தினகரன் அவர்கள் அன்றைக்கு எழுப்பிய சந்தேகம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய இத்தகைய புரிதலோ, பக்குவமோ, தெளிவோ எதுவுமில்லாமல் பச்சை சுயநலத்தோடு உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து, சாதி மாச்சர்யங்கள் இன்றி அண்ணன்- தம்பிகளாக பழகி வந்த மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும், பகைமையையும் பழனிசாமி ஏற்படுத்தினார். பின்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும் அந்தப் பகையை ஊதிப் பெருக்கி குளிர் காய்ந்தார். இதற்காக இவர்கள் இருவரும் மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
உண்மையிலேயே இவர்கள் சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்க நினைத்திருந்தால், இதில் தொடர்புடைய அனைத்து சமூகத்தினரையும் அழைத்துப் பேசி, ஒழுங்கான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்பிறகே அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டினை அளித்திட வேண்டும். உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்புக்குப் பிறகாவது அண்ணன் டிடிவி அன்றே சொன்ன வழிமுறையைப் பின்பற்றி ஆட்சியாளர்கள் செயல்படுவார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AMMK, Vanniyar, Vanniyar Reservation