இடத்தகராறில் இருவரை துப்பாக்கியால் சுட்ட முதியவர் - பழனியில் பரபரப்பு

இடத்தகராறில் இருவரை துப்பாக்கியால் சுட்ட முதியவர் - பழனியில் பரபரப்பு

தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சி.

பழனியில் இடத்தகராறில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர்.

 • Share this:
  திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இளங்கோவனுக்குச் சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 செண்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்திற்கு அருகே தியேட்டர் உரிமையாளர் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார்.

  இளங்கோவனுக்குச் சொந்தமான இடம் தனக்குச் சொந்தமானது என்று தியேட்டர் உரிமையாளர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இடம் இளங்கோவனுக்குத்தான் சொந்தம் என்று பழனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று காலை இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைத்து கட்டட பணி மேற்கொண்டபோது அங்கு வந்த நடராஜன், காலி இடத்தில் எந்தப் பணியும் செய்யக்கூடாது என்று தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதனையடுத்து இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த நடராஜன், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டதாக தெரிகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில், சுப்பிரமணி வயிற்றிலும், பழனிச்சாமி இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.

  Also read: கவிஞர் சினேகன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது - போலீசார் வழக்குப்பதிவு

  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளங்கோவன், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். துப்பாக்கிச் சூட்டில் குண்டு காயமடைந்த சுப்பிரமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்தபோது பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் சுப்பிரமணிக்கு இரத்தம் கொடுத்து, உயிரைக் காப்பாற்ற மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

  இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த வந்த பழனி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நடராஜனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். நடராஜன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரில், வயிற்றில் குண்டு பாய்ந்த சுப்பிரமணி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பழனிச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் குண்டு அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்நிலையில், நடராஜனை கைதுசெய்த பழனி நகர போலீசார், அவர் பயன்படுத்திய துப்பாக்கியைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜன் மீது கொலை முயற்சி, தற்காப்புக்காக பயன்படுத்த வேண்டிய துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியதால் இந்திய ஆயுதச் சட்டம், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பது என இபீகோ 307, 27/1, 294(பி) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.முத்துச்சாமி, தடயவியல்துறை கூடுதல் இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்டோர் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Rizwan
  First published: