பழனி முருகன் சிலை விவகாரம்: அறநிலையத்துறை ஆணையர் தனபால் தலைமறைவு

news18
Updated: May 17, 2018, 5:41 PM IST
பழனி முருகன் சிலை விவகாரம்: அறநிலையத்துறை ஆணையர் தனபால் தலைமறைவு
மூலவர் சிலை
news18
Updated: May 17, 2018, 5:41 PM IST
பழனி முருகன் கோவில் சிலை மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு கோவிலில் தனி அறையில் பாதுகாப்பாக  வைக்கப்பட்டது.

பின்னர் சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வரவே ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போது கோவில் இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சுரேஷ் ஆகியோர் பழனி சென்று இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிலை விவகாரம் தொடர்பாக, புதிய சிலை வைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிலை அமைக்க தங்கம் நன்கொடையாக வழங்கியவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சிலை தயாரிப்பு பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. அதனால் தனபாலின் வீடு உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்