தமிழகத்தில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் நான்காவது நாளாக தொடரும் நிலையில், 20 லிட்டர் குடிநீர் கேன் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றி, கேன் மூலம் விற்பனை செய்யும் பணியில் சுமார் 1650 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதனால், குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
WATCH NEWS18 TAMIL NADU CHANNEL @ Airtel: 782 | Tata Sky: 1550 | Sun Direct: 130
குடிநீர் கேன் உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிப்பதற்கு கேன் குடிநீரை மட்டும் நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
மேலும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.