மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும்வரை உத்வேகத்துடன் பணியை தொடருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் தமிழக காவல்துறையினர், அரசு அலுவலர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஆளும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 21 மாநராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலையில் உள்ளது. இதனால், திமுகை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் தோல்வியை தழுவி உள்ளன.
இந்நிலையில், மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும்வரை உத்வேகத்துடன் பணியை தொடருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக படுதோல்வி : திமுக அமோக வெற்றி
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி!
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகளாக நெஞ்சுரத்தோடு களம் கண்ட கழக வேட்பாளர்களுக்கும் , அவர்களுக்காகப் பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும் வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.
தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.