வட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களுக்கு இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள், அருகே உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணையும், ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2வது தவணையும் கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது எனவும் இவர்களை மனதில் வைத்து மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும், பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
Also Read : 'உடலில் எங்கு தொட்டாலும் வலி '.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி - உதவிக்காக தவிப்பு
இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வார்டுகளை மறுக்கட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதி, மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் நாராயணபாபு ஆணையிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.