ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணி நியமனம் கேட்டு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா!

பணி நியமனம் கேட்டு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பணி நியமனம் கேட்டு லால்குடி, ஒரத்தநாடு, அறந்தாங்கி  அரசுக் கல்லூரிகளின்  கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளால், அந்த பல்கலைக்கழகம் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அங்கு தேவையை விட கூடுதலாக பணியாற்றியவரும்  ஊழியர்கள், பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து உபரி ஆசிரியர்களை அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனால் ஏற்கனவே பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் பணி நிரந்தரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பணியாற்றி வரும் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு லால்குடி எம்.எல்.ஏ (திமுக) சவுந்திரபாண்டியன் ஆதரவு தெரிவித்து அவரும் தர்ணாவில் பங்கேற்றார். இதனிடையே பணி நியமனம் கேட்டு கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தால் லால்குடி அரசு கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கவுரவ விரிவுரையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவுரவ விரிவுரையாளர்கள் என்று தங்களின் பெயரோடு மட்டும் கவுரவம் இருந்து என்ன பயன்? பணி நிரந்தரம் எப்போது கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லால்குடி, அறந்தாங்கி, ஒரத்தநாடு அரசுக் கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக தொடங்கப்பட்டு, அரசுக் கல்லூரிகளாக கடந்த ஆண்டு மாற்றப்பட்டன.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trichy