முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

OPS Meeting: மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தென்னரசுவை வெற்றி பெற செய்வதற்காக தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தன்னால் நியமிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்றும், அவர் தங்களை விட்டு நீண்ட தூரம் பயணித்திவிட்டார் என்றும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அண்மையில் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2021 சட்டமன்ற இடைத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தனக்கு சீட்டு வாங்கி தருவதாக கே.பி.முனுசாமி தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு பெற்றதாகவும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி ஆடியோவில் தான் பேசியதாகும், பெறப்பட்ட பணம் கட்சி பணிக்காக என்றும் கூறினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க ஒரு சில நாட்களில் இருக்கும் சூழ்நிலையில் இந்த ஆடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது அந்த விவகாரம் குறித்தும் இந்த ஆலோசனையில் பேச உள்ளனர்.

மேலும், தங்கள் அணியை சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போவதாக தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றனர். இதனிடையே, வரும் 24ம் தேதி மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை எப்படி சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்ய உள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மார்ச் மாதம் 6 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதேபோல் தங்களது சார்பாக என்ன செய்யலாம் என்பது குறித்து மிக முக்கியமான ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஓ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவரது அணியை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வார்களா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

First published:

Tags: ADMK, OPS - EPS, Politics, Tamilnadu