ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் தன்னை சந்தித்த முக்கிய நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 23ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை.
அதேநேரம் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆறாவது நாளான இன்றும், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயகுமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பல மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் ஈபிஎஸ்-ஐ சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை ஆகியோர், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், ஒற்றைக் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிக்க: அதிமுக தோல்விக்கு இபிஎஸ் செயல்களே காரணம்.. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நாளிதழ்களில் விளம்பரம்
இதனிடையே, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது, அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரலாம் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.