Home /News /tamil-nadu /

தனி நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மன்னிப்பு.. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக தொடர்ந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்?

தனி நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மன்னிப்பு.. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக தொடர்ந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்?

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

OPS Case : அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனி நீதிபதியிடம் மன்னிப்பு கோரப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில் தனி நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுத்த கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதால், இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரித்தார்.

அப்போது நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரிய விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை தங்கள் முன் வாதிட விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிபதி, தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தினார்.

மன்னிப்பு கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

பின்னர் நீதிமன்றம் கூடியபோது, மன்னிப்பு கோரியது தொடர்பாக மனு தாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிபதியை மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்றது தொடர்பான மெமோவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று கூறிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணையை ஒத்திவைத்தார்.

பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த  மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Published by:Raj Kumar
First published:

Tags: AIADMK, Chennai High court, OPS

அடுத்த செய்தி