தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுக-வுக்கே உண்டு என்பதை தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதிமுகவின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை இடைத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவினர் அனைவரும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனிமனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசைமாறிய தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
5 ஆண்டுகளாக தேசபக்தியையும், மக்கள் தொண்டையும் தனது இரு கண்களாகக் கொண்டு நல்லாட்சி நடத்திவரும் நரேந்திர மோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மேலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரியில் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து போராடுவோம் என அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்வதற்கு வாழ்த்து தெரிவித்தார். மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும் அவர் பாமக சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
Also see... கடந்த தேர்தலை விட நடப்பு தேர்தலில் அதிக இடங்களை பெற்ற கட்சிகள்!
Also see...
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.