ஆட்சி கலைந்துவிடும் என்பதால் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர்! மு.க.ஸ்டாலின் காட்டம்

ஆட்சி கலைந்துவிடும் என்பதால் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர்! மு.க.ஸ்டாலின் காட்டம்
ஸ்டாலின்
  • Share this:
மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி போய்விடும். சிறையில் இருக்க வேண்டும் என்ற அச்சத்தால் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

என்.பி.ஆர் கணக்கெடுப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வராததால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘NPR நடைமுறையை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஏற்கனவே கோரிக்கை வைத்து மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அமைச்சர் உதயகுமார் சில விளக்கங்களை சொன்னார். ஏற்கனவே சொன்ன தவறான விளக்கங்களை மீண்டும் சொன்னார். இந்தியாவில் உள்ள 13 மாநில முதல்வர்கள் எதிர்த்து உள்ளனர்.


ஆந்திரா எம்.பி க்கள் இந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தார்கள். ஆனால், தற்போது அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.  வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இரவு பகல் பாராமல் போராடி வரும் மக்களை அழைத்து பேசுங்கள், தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று கேட்டோம்.
அரசு ஏற்கவில்லை. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சி போய்விடும். சிறையில் இருக்க வேண்டும் என்ற அச்சத்தால் தீர்மானம் போட மறுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி, ‘NPR நடைமுறையை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், ‘குடியுரிமை சட்டம் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. ஆனால், மக்கள் தொகை பதிவேடு மத்திய அரசு கடைபிடிக்கும் நடைமுறை. அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

இந்த நடைமுறையை பின்பற்றி தவறான முன் உதாரணத்துக்கு தமிழகம் ஆளாகி விடும். எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும், பயம் தேவையில்லை என்று ஒரு பதில் மட்டும் சொல்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, ‘ஏற்கனவே 13 மாநிலங்கள் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 1 மணி நேரம் சட்டமன்ற வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Also see:

First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading