ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... குதூகலமாக குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... குதூகலமாக குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தென்காசி ,குற்றால அருவி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  வடகிழக்கு பருவமழையால் அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 8 மாதங்களுக்கு பின் கடந்த 15ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

  இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுவதோடு, தனிமனித இடைவெளியுடன் குளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கடந்த இரு தினங்கள் வார விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு குவிந்து பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

  இதேபோல், குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், சோமசுந்தரேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிறைந்து மறுகால் பாய்கிறது. இதை கல்லல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பதோடு, செல்ஃபியும் எடுத்து மகிழ்கின்றனர்.

  வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 48 மணி நேரத்திற்கு குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும், டிசம்பர் 22ம்தேதி மாலத்தீவு பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: