Home /News /tamil-nadu /

அனைந்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் அ.தி.மு.க இணையவில்லை- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அனைந்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் அ.தி.மு.க இணையவில்லை- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் கடிதம்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைந்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் இணையவில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘தங்களின் 2-2-2022 நாளிட்டக் கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்தக் கடிதத்தில் கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க அனைந்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து, அந்தக் கூட்டமைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.

    ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துக்களை உடையவர்களை அழைத்துப் பேசி அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செயாயமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்பதை தங்களுக்கு முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கூட்டாட்சி, சமூக நீதி என்றாலே மக்களின் நினைவிற்கு உடனடியாக வருவது அ.தி.மு.கவும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும்தான் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பினை பெறுவதிலும் அதிகப் பயன்பெற்று வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டாக உயர்த்தப்பட்டதுதான். இது சமூக நீதிக்கான முதல் எடுத்துக்காட்டு.

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் 52 விழுக்காடு இருக்க வேண்டுமென மண்டல் குழு பிரதானமாக பரிந்துரைத்தும், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க 1990-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைப் பாராட்டி 21-8-1990 அன்று தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மண்டல் குழுவின் முக்கியப் பரிந்துரையான 52 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், கல்வியிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, மண்டல் குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காத மத்திய அரசைக் கண்டித்தவர் ஜெயலலிதா. இது சமூக நீதிக்கான இரண்டாவது எடுத்துக்காடு.

    பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு


    1931-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 67 சதவீதமாக இருப்பதால், இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று கருதிய ஜெயலலிதா 30-9-1991-ம் ஆண்டு மத்திய அரசு, மத்திய அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்கள் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார்கள். இது சமூக நீதிக்கான மூன்றாவது எடுத்துக்காட்டு.


    தமிழ்நாட்டில் 30 சதவீத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 18 சதவீத தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், ஒரு விழுக்காடு பழங்குடியினருக்கும் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான வழக்கினை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டுமென்றும், மொத்த விழுக்காடு 50 சதவீத உச்சவரம்பை மீறக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை உறுதி செய்திட இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரும் தீர்மானத்தை 9-11-1993-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றினார்கள். இது சமூக நீதிக்கான நான்காவது எடுத்துக்காட்டு.

    தமிழ்நாட்டின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அ.தி.மு.க தயங்காது. தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதாவது இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தபோது அதுபோன்ற எதுவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது, தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைந்திந்திய அ.தி.மு.க தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில், நேரத்தை வீண்டிப்பதைத் தவிர்த்து நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin, O Panneerselvam

    அடுத்த செய்தி