ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணையத்தில், இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மீண்டும் ஆஜராகிறார். முதல் நாளில் எழுப்பப்பட்ட 78 கேள்விகளில் பெரும்பாலானவற்றிற்கு தெரியாது எனவே அவர் பதிலளித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நேற்று காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜரான ஓபிஎஸ்.சிடம் விசாரணை நடைபெற்றது.
கேள்வி : 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா எதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பதில்: ஜெயலலிதா எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்று எனக்கு தெரியாது. அப்போது நான் என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இருந்தேன். என் உதவியாளர் நள்ளிரவில் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அடுத்த நாள் பிற்பகலில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு நான் சென்றேன். அங்கிருந்த அப்போதைய தலைமை செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என பதில் அளித்துள்ளார்.
Also Read: இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த நடிகர் விக்னேஷ்..!
கேள்வி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது? எந்தெந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பதில் : அதுபற்றி விவரங்கள் தெரியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
கேள்வி: ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருந்தது?
பதில்: ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததைத் தவிர, வேறு உடல் உபாதைகள் குறித்து தெரியாது என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
மருத்துவமனையில் நடைபெற்ற காவிரி கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்றும் அறிக்கை வந்தபின்னரே அது குறித்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டது குறித்தும் தனக்கு தெரியாது எனவும் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 35 நாட்களுக்கு பின், அண்ணா, எம்ஜிஆரை போல அவரையும் வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியிடம் கூறியதாகவும்,அதற்கு மருத்துவர்களிடம் ஆலோசித்த பின் முடிவெடுக்கலாம் என விஜயபாஸ்கர் கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Also Read: ஆபாச வீடியோ.. இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்.. திமுக நிர்வாகி, பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது
அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியிடமும் இதே கருத்தை வலியுறுத்தியதாகவும்,ஆனால், ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து விடுவார் என விஜயகுமார் ரெட்டி கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அமைச்சரவையை கூட்டச் சொன்னது தொடர்பான கேள்விக்கு, தன்னிடம் அதை பற்றி அவர் பேசவில்லை என குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற சொல்லவில்லை எனக் கூறியுள்ள ஓபிஎஸ்.நோயின் தன்மையை பொறுத்து, அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது தவறு இல்லை என்றும், தர்மயுத்தம் தொடங்கியது முதல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரை, தான் பேசியது அனைத்தும் சரியானதே எனவும் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலாவின் அழைப்பின் பேரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா வந்ததாகவும் அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சுமார் மூன்றரை மணி நேர விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும் இன்று ஆஜராக, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Appolo Hospital, Arumugasamy commission, Jayalalithaa, Jayalalithaa CCTV, Jayalalithaa Dead, O Panneerselvam, Sasikala