Home /News /tamil-nadu /

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - அ.தி.மு.கவில் நடப்பது என்ன?

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - அ.தி.மு.கவில் நடப்பது என்ன?

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அ.தி.மு.க விவகாரம் நாளுக்கு நாள் புதிய புதிய பரிணாமங்களை அடைந்து கொண்டே செல்கிறது. திரைப்படங்களை மிஞ்சும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் இருந்துவருகிறது. நீதிபதிகளின் தீர்ப்பு ஒருவொருக்கொருவர் முற்றிலும் நேர்எதிராக உள்ளது. ஒரே விவகாரம், ஒரே கட்சி, ஒரே சட்ட விதிகள்.. ஆனால்,  நீதிபதியின் தீர்ப்பின் முடிவு நேர்எதிராக உள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல் தலைமைக் கழக நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கம் என்பவை மிக முக்கியமான முடிவுகள்.

எனவே, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதியளித்தது.

அதனையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி விசாரணையின்போது மிக முக்கியமான கேள்விகளை எழுப்பினார். அந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘அ.தி.மு.கவில் தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23-ம் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அந்த வாதம் கற்பனையானது.

கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடைவிதிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியாக அமர்ந்துவிடுவார். ஓ.பன்னீர் செல்வம், வைரமுத்து உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களாகிவிடுவதால் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது’ என்று குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு கிடைத்த மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்பட்டது. இந்தத் தீர்ப்பையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு துரைசாமி, சுந்தர மோகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும்.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.

இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்வார். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு. எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு கிடைத்த சட்ட அங்கீகாரம் இது.

தற்போதைய உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்படாத வரை எடப்பாடி பழனிசாமி சட்ட ரீதியாக அவரை பொதுச் செயலாளராக அடையாளப்படுத்திக் கொள்ள இயலும். தற்போதைய சூழலில் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.

ஆனால், செப்டம்பர் 2-ம் தேதி நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு முரண்பாடு நிறைந்ததாக உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாவது குறித்து உரிமையியல் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தார் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்த்தனர். அதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னதாகவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்தனர். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று குறிப்பிட்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்குத் தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Published by:Archana R
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

அடுத்த செய்தி