முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் நியமனம்

ஓ.பி.ரவீந்திரநாத்

ஓ.பி.ரவீந்திரநாத்

மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்படவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தநிலையிலும் கட்டுமானப் பணிகள் பெரிய அளவில் நடக்காமல் இருந்துவருகிறது. அதேநேரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப்பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்த வி.எம்.காடோச் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், 4 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர்களில் மக்களவையின் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உறுப்பினர் பதவிக்கு தேனி எம்.பியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கிடையில், வெங்கடேசன் அவரது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதனால், எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதமாக கட்டப்படுவது நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் கையில் செங்கலை வைத்துக்கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்துவிட்டேன் என்று கூறி விமர்சனம் செய்துவருகிறார். அவருடைய பிரச்சாரத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aiims Madurai, Op raveendranath